உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

காங்கயம் வட்டம்

98. திப்பு சுல்தான் வாங்கிய பழைய கோட்டை ஈரோடு மாவட்டம், பழைய கோட்டையில் பசுக்கள், காளைகள், குதிரைகள் மிகுதியாக இருந்தன. காங்கேயம் காளை போலப் பழையக் கோட்டை குதிரைகளும் சிறப்பானவை. ஒரு பட்டக்காரர் குதிரையேறி கொங்கு நாட்டுத் தேவாரத் தலங்களான ஏழு கோயில்களையும் ஒரே நாளில் சென்று வணங்கி வந்தார். அவர்கள் குதிரை பழைய கோட்டையிலிருந்து பழனிக்கு 9 நாழிகையில் (4 மணி 16 நிமிடம்) செல்லும் என்று பாடல் கூறுகிறது.

22ஆம் பட்டக்காரர் நல்லசேனாபதிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியாரிடம் 10 சுழிகள் உடைய 'பஞ்சகல்யாணி’ என்னும் மிக அரிய அழகான குதிரை ஒன்று இருந்தது. அக்குதிரையைப் பற்றித் திப்பு சுல்தான் கேள்விப்பட்டார். அதை வாங்க விரும்பினார். பழைய கோட்டையிலிருந்து குதிரைகள் வாங்கி ஐதர்அலி, திப்புசுல்தான் படைக்கு அனுப்ப ஒரு இசுலாமியப் பொறுப்பளர் பழைய கோட்டையில் இருந்தார் (அவர்களுடைய ஆறாம் தலைமுறையினர் இன்றும் பழைய கோட்டையில் வாழ்கின்றனர்). அவர் மூலம் அக்குதிரையை விலைக்கு வாங்க இயலவில்லை. பட்டக்காரர் கொடுக்க மறுத்துவிட்டார்.

ஒருநாள் பழையகோட்டைக்குத் திப்புசுல்தானே நேரில் வந்தார். பட்டக்காரர் வரவேற்று சைவ விருந்து அளித்தார். குதிரையைக் கொடுத்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்திய திப்புசுல்தான் மிக அதிக விலையாகிய 200 பொன் கொடுத்து அக்குதிரையை வாங்கிச் சென்றார்.

காரையூர்ச் சர்க்கரை உத்தமக் காமிண்டன்

காத்து வளர்த்திய பஞ்ச கல்யாணிப்

பேரைஉள ஓர் குதிரை சுழிகள் பத்தும்

பிறழாது இருந்தசெய்தி கேட்டு வந்து

தாரையோ அலதுஇலையோ எனமிரட்டித்

தயவொடுஇரு நூறுபொன்னும் தானே ஈந்து

போரையே கொள்திப்பு சுல்தான் சைவ

போசனமும் கூடஉண்டு போனான் தானே!

பழைய கோட்டை மரபுப் பாடல்கள் எண். 72. பக்கம் 78