உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 19

3. குற்றாலநாதருக்கும் நெல்லை காந்திமதியம்மனுக்கும்

இஸ்லாமிய வணிகர்கள் கொடை*

தென்காசியில் உள்ள அகமது பேட்டையில் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளை வியாபாரம் செய்யும் மணியம் இசுமாயில் ராவுத்தர் உள்ளிட்ட இசுலாமிய வணிகர்கள் அனைவரும் குற்றாலம், குற்றாலநாதசுவாமி திருவிழாப் பூசைக் கட்டளைக்கும், திருநெல்வேலி காந்திமதியம்மனின் சிறுகாலைச் சந்திக் கட்டளைக்கும் கொடுத்த மகமைக் கொடையை இச்செப்பேடு கூறுகிறது.

அகமது பேட்டை வணிகர்கள் இல்லாமல், செங்கோட்டை, புளியரை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப்பேட்டை, சுரண்டை முதலிய ஊர்ச் சந்தையில் வியாபாரம் செய்யும் இசுலாமியர்களும் இம்மகமையை மாதா மாதம் அளிக்க வேண்டும்

எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்குச் சைவர்கள் எவரேனும் தீங்கு செய்தால் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்திலும், இசுலாமியர்கள் தீங்கு செய்தால் தாய்க்கு விக்கினம் செய்த தோஷத்திலும் போவார்கள் என கூறியுள்ளனர்.

பட்டயம் எழுதியவர் மாடன் செட்டியார். தானாதிபதி அம்மைநாதன் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளார். இசுலாமி யர்கள் சார்பில் இசுமாயில் ராவுத்தர் கையொப்பமிட்டுள்ளார். கோயில் கார்பாரு சந்திர குமாருப்பிள்ளை செப்பேடு செய்து வைத்தார்.

இரண்டு செப்பேடு தயார் செய்து குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலுக்கும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. கொடை அளித்த ஆண்டு கி.பி.1795.

1) மெக்கன்சி ஆவணம் ஆர் 5371-2: தமிழக அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை -5.

2) தென்னிந்தியக் கோயில் சாசனங்கள், மூன்றாம் தொகுதி முதல் பாகம். எண் 1099, பக்கம் 1073-4.

3) Annual Report on Epigraphy (A) 43 of 1946.