உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆக்கியோன் உரை

தமிழ்நாடு அரசின் இதழான 'தமிழரசில்' தொடர்ந்து தமிழரின் நாட்டுப்புறக் கலைகள் பற்றி எழுதிவந்ததை அடுத்து அதை ஓர் ஆய்வு நூலாக வெளியிடவேண்டும் என்ற ஆவலை நிறுவன இயக்குநர் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்கள். அதனை நிறைவேற்றும் துணிவில் இந்நூல் விரைவாக எழுதப்பெற்றுள்ளது.

நாட்டுப்புறத்தில் பிறந்து வளர்ந்த பேற்றினால் நாட்டுப்புறக் கலைகளை நேரில் கண்டுகளிக்கும் வாய்ப்பு பலமுறை கிடைக்கப்பெற்றது. மேலும் பல இடங்களில் நாட்டுப்புற மக்களின் கலை ஆர்வத்தையும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு இன்புற வேண்டிய பேறும் வாய்த்தது. அண்மையில் தமிழ்நாடு அரசு மக்கள் தொடர்பு செய்தித் துறையின் அழைப்பின் பேரில் துணை இயக்குநர் திரு. கிருஷ்ணபாரதி அவர்களுடன் மதுரை, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு நாட்டுப்புறக் கலைகளைக் கண்டு அவற்றைத் திரைப்படமெடுப்பதற்காகச் செல்லும் நல்வாய்ப்பும் கிடைத்தது. பல்லிடத்து நண்பர்கள் அவர்களிடத்துக் கலைத் தொடர்புச் செய்திகளை அள்ளித் தந்தார்கள்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினர் ஏற்பாடு செய்யும் பல மாநில நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் ஒப்பீட்டு ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்தன. மேனாட்டு அறிஞரின் நூல்கள் இன்னும் விரிவாகச் சிந்திக்கும் ஆற்றலைத் தந்தன. சென்னை அருங்காட்சியகத்தின் பொன்னாகப் பேணிக் காக்கப்பெற்றுள்ள பழங்காலத்துக் கலைக் கருவிகளும், தொடர்புடைய பொருட்களும் விரிவான ஆய்வுக்கும் தெளிவான கருத்துக்கும் நற்றுணையாக அமைந்தன.

இந்நூலை அச்சுருவாக்கும் பணியில் என்னோடு இரவு பகலென்று பாராது துணைநின்று அச்சுப்படிகளை அயராது படித்துத் திருத்தித் தந்த என் அருமை ஆய்வு மாணவச் செல்வன் திரு. ராஜ் பவுன்துரை அவர்களை மிகவும் அன்புடன் நினைத்து மகிழ்கிறேன். கலைகளின் நிகழ்ச்சிப் படங்களைக் கேட்டவுடன் அருமையாகத் தந்து உதவிய தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றச் செயலர் திரு.டி.வி.நாராயணசாமி அவர்களையும் தமிழ்நாடு அரசு