பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

97

 கொள்ளச் செய்வான் வேண்டி, அவள் பாசி அவள் கணவனின் புகழ்களை அடுக்கடுக்காக எடுத்துக் கூறும் அந்தணப் பாங்கன் ஒருவன் கலிந்தொகையில். காட்சி அளிக்கின்றான்38; வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் அறிவுடை அந்தணன் ஆன இவன் திரு. அய்யங்கார் அவர்களின் கண்களில் பட்டிலன்.

ஆனால், தன் உள்ளம் கவர்ந்த ஒருத்தியை,போல் அவள் உள்ளத்தைத் தன்பால் பறிகொடுத்துத் தவிக்கும் ஒருத்தியை அடைய மாட்டாக் காதற் பெருந்துயரால் கலங்கிக் கருத்திழந்து கடமை மறந்து கிடந்தான் ஓர் இளைஞன். அவனுக்கு ஒரு பார்ப்பனத் தோழன், பார்ப்பன குலக்கோலமாம் தண்டு கமண்டலத்தோடு காட்சி அளிப்பவன் விரதநாட்களில் உண்ணாது இருந்து விரதம் காத்துப் பின்னரே உண்னும் ஒழுக்க நெறியில் நிலைத்து நிற்பவன். எழுதப்படாதது என்ற பெருமைக்கு உரியதான நால்வேதங்களை முறையாகக் கற்றுணர்ந்தவன்.

அவன், தன் நண்பன் காதல் நோயால் கருத்திழந்து கடமை மறந்து கிடப்பது காணப்பொறாது அவனுக்குச் சிலபல அறிவுரைகளை வழங்கினான். ஆனால், காதல் மயக்கத்தில் ஆழ்ந்து போய்விட்ட இளைஞன், பார்ப்பன நண்பனின் அறிவுரையினை ஏற்க மறுக்கும் முகத்தான் நால் வேதம் கற்ற அவன் அறிவுத் திறனைப் பாராட்டி விட்டு, நண்பனே! நீ இவ்வாறெல்லாம் எனக்கு அறிவுரை கூறுவதை விடுத்து, நீகற்ற அந்த வேதத்தில், என்னையும், என் காதலியையும் போலப் பிரிந்து துயருற்றுக் கிடக்கும் இளம் காதலர்களை ஒன்றுபடுத்தும் திறம் வாய்ந்து மாமருந்து ஏதேனும், இருப்பின்,அது அறிந்து தெரிவித்து, நாங்கள் இருவரும் ஒன்றுபடத் துணைபுரிவாயாக அதுவே நண்பனுக்குச் செய்ய்க் கூடிய நல்ல துணை கூறியதான கருத்தமைந்த பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.