பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1.பொருநர் ஆற்றுப்படையின்பாட்டுடைத்
தலைவனாம் கரிகாலனும், பட்டினப்
பாலையின் பாட்டுடைத் தலைவனாய திருமாவளவனும் வேறு வேறுபட்ட
இருவரா? அல்லது இருவரும் ஒருவரா?

பொருநர் ஆற்றுப்படை, கரிகாலன் பற்றிக் கூறுவன இவை :

'வென்ற வேலினையும், அழகிய பல தேர்களையும் உடைய இளஞ்சேட் சென்னியின் மகன். முருகனது சீற்றம் போலும் சீற்றத்தையும், பகைவர்க்குத் தரும் அச்சத்தையும் உடைய தலைவன். தாயின் வயிற்றில் இருக்கும் போதே அரச உரிமையைப் பெற்றவன். முன்பு தன் ஆற்றல் அறியாத பகைவர், பின்னர்த் தன்வலி அறிந்து ஏவல் செய்யவும்,அவ்வாறு ஏவல் செய்ய மறுத்த பகைவர் நாடுகள் கவலை கொள்ளவும், கடல் மீது ஞாயிறு தோன்றி உலகிற்கு ஒளி வீசியவாறே விண்ணில் உலா வருதல் போல், பிறந்து, தவழ்ந்து செல்வதைக் கற்ற குழந்தைப் பருவம், தொட்டே சிறந்த தன் நாட்டு ஆட்சியைத் தோளில் தாங்கி நாள் தோறும் வளர்த்தவன். யாளியின், பிறர் உயிர்களுக்கு அச்சத்தைத் தரும் குட்டி, டால் உண்டலை மறவாத இளம் பருவத்திலேயே, முதல் வேட்டையிலேயே ஆண்யானையைக் கொன்றது போல், பனைமாலை அணிந்த சேரனையும், வேப்பமாலை அணிந்த பாண்டியனையும், வெண்ணிப் போரில் வென்றவன்; ஆத்தி மாலை அணிந்தவன். கரிகால் வளவன் எனும் பெயர் உடையவன்.