பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர். கா. கோவிந்தனார்

9


வடவர் வாடக், குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறி, மன்னர்
மன் எயில் கதுவும் மதன் உடை நோன்தாள்
மாத்தானை மற மொய்ம்பின்
செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப்
புன் பொதுவர் வழி பொன்ற
இருங்கோவேள் மருங்கு சாயக்
காடுகொன்று நாடாக்கிக்
குளம் தொட்டு வளம் பெருக்கிப்
பிறங்குநிலை மாடத்து உறந்தை போக்கிக் கோயிலொடு குடி நி றீ இ...14
..................................
அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமாவளவன் ...15.

சிலப்பதிகாரம், திருமாவளவன் பற்றிக் கூறியிருப்பது.

தமிழ்நாட்டு எல்லையுள் தன்னோடு எதிர்த்துப் போரிட வல்ல அரசர்களைக் காணாது, திருமாவளவன், போரில் பேராசை உடையவன் ஆதலின் வடநாடு பெரிய நாடு ஆகவே, ஆங்கு எதிர்த்துப் போரிடும் அரசர்களைப் பெறலாம் எனக் கருதி, ஆங்குச் செல்ல, நல்ல நாள் நாழிகையில், வாள்,குடை,முரசுகளை முன்னே போகவிடுத்து, என் தோள், அவ்வடதிசை பெறுக எனத் தான் வழிபடு கடவுளை வேண்டிக்கொண்டு, அவ்வடநாடு நோக்கிப்போன அந்நாளில், இமயப் பெருமலை இடைநின்று குறுக்கிடவே, மனம் சலித்துத் திரும்பி வருபவன், போர் முயற்சி மேற். கொண்டு செல்ல விரும்பிய எனக்குப் பகையாகக் குறுக்கிட்டு விட்டது. இம்மலை என அதன் மீது சினம் கொண்டு அதன் உச்சியில் தன் புலிச் சின்னத்தைப் பொறித்து விட்டுத் திரும்பு வோனுக்கு, வச்சிர நாட்டான் முத்துப் பந்தரையும், மகத நாட்டான் பட்டி மண்டபத்தையும், அவந்தி. நாட்டான் வாயில் தோரணத்தையும் கொடுத்தனர்.