பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

அழைக்கப்படும். மன்னர்களின் மலைவளம் காணும். வேட்கையை நிறைவேற்றித்தர,கல்லும் மண்ணும் இட்டும், மரம் செடி கொடிகள் வளர்க்கப் பெற்றும், தண்ணிர் அருவி என ஓட ஒழுகப் பெற்றும் கட்டப்பெற்ற செய்குன்றுகள் அகநகர்க்கு அழகு செய்து நின்றன.

கோயில்கள்:

பழந்தமிழ் மக்கள் தம் செல்வ வாழ்வின் செருக்குணர்த்தும் நிலையங்களாகக் காட்சி அளிக்கும் பழந்தமிழ் நாட்டுப் பேரூர்கள், அம்மக்களின் மன அமைதிக்கு, விழுத் துணை புரியும் ஆலயங்களையும் கொண்டிருந்தன. சமயத் துறையில் சமரசம் நிலவிய காலம் சங்க காலமாதலின், அக் காலப் பேரூர்களில், சைவம், வைணவம், சமணம், பெளத்தம் முதலாம் பல்வேறு சமயங்களும் இடம் பெற்றி ருந்தன; அதனால் அப் பேரூர்கள், சிவன், முருகன், திருமால், பல தேவன், ஞாயிறு, திங்கள், இந்திரன்போலும், கடவுளர்களுக்கும், இந்திரன் ஊர்தி வெள்ளை யானை, அவன் படைக்கலம் வச்சிராயுதம், அவன் காவல் மரம் கற்பகம் ஆகியவற்றிற்கும் எடுத்த கோயில்களாலும், புத்த பீடிகை, அருகத்தானங்களாலும் பெருமை பெற்றிருந்தன.

பழந்தமிழ் நாட்டுப் பேரூர்களின் பண்பும் பெருமையும் இவையாம்!