பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

படையெடுப்பு உணர்த்தும் எந்த அடையும் அவன் பெயரோடு இணைக்கப் படவில்லை.

8.கலிங்கத்துப் பரணி, குறுமி என்ற ஊரை வென்றவனும்,பட்டினப்பாலை, நூலைப் பாடிய புலவனுக்குப் பதினாயிரம் பொன் பரிசு அளித்தவனும் ஆகிய சோழன் ஒருவனைக் குறிப்பிடுகிறது.62 ஆனால் பெயர் கூறவில்லை. உரை ஆசிரியர்கள், அவன் கரிகாலன் என்கின்றனர். இரண்டையும் செய்தவன் ஒருவனே ஆயின், கரிகாலனின் இமயப் படையெடுப்பைக் கூறிய புலவர்களில், எவரும், குறுமி வெற்றியைக் குறிப்பிடவில்லை. ஆகவே, குறுமி வென்ற சோழன் கரிகாலன் ஆகான். ஆகவே, பட்டினப் பாலைக்குப் பரிசளித்த சோழனும், கரிகாலன் ஆகான். அவன் திருமாவளவனின் வேறு பட்டவனே ஆவன்.

9.இளங்கோ அடிகள், இரண்டு இடங்களில் கரிகாலனைப் பெயர் சுட்டிக் கூறியுள்ளார்.63 அந்த இரு இடங்களிலும், கரிகாலனின் இமயப்படை எடுப்பு பற்றிய சிறு குறிப்பும் இல்லை. ஆனால் திருமாவளவன்64 ஒரு இடத்தில் தான் குறிப்பிட்ப் பட்டுள்ளான். அந்த இடத்தில் மட்டும் இமயப் பெரு வெற்றிச் செயலைக் குறிப்பிட்டுள்ளார். திருமாவளவன், கரிகாலன் இருவரும் ஒருவரே ஆயின், இளங்கோ அடிகள், தம் நூல் நெடுகிலும்,அவற்றுள் ஏதேனும் ஒரு பெயரையே ஆண்டிருப்பர். வெவ்வேறு இடங்களில்,வெவ்வேறு பெயர்களை ஆண்டிருக்க மாட்டார், ஆகவே இளங்கோ அடிகள், கரிகாலன், திருமாவளவன், ஆகிய இருவரையும் வேறுபட்ட இருவராகவே கொண்டுள்ளார்.65

இனி, கரிகாலன் வேறு, திருமாவளவன் வேறு, என்பதற்கான காரணங்களாக ஆய்ளாளர்கள் கூறியுள்ள வற்றின் தகுதி, தகுதி இன்மைகளை ஆராய்வாம்.