பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200


தானோடு வெண்ணி வாயில் போர்க்களத்தே பொருதவருள் இருங்கோவேள் உள்ளிட்ட பதினொரு வேளிரும் அடங்குவர்;67 கரிகாற் பெருவனத் தானோடு ஒன்பது வேளிர் வாகை எனும் இடத்தே போரிட்டுத் தோற்றனர்;68 சேர வேந்தன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் தன்னோடு பொருத இரு பெரும் வேந்தரையும் வேளிரையும் வென்று அழித்தான்;69 கழுவுள் என்ற ஆயர்குலத் தலைவனை பதினான்கு வேளிர் போரிட்டு வென்றனர்;70 போன்ற வரலாற்று உண்மைகள் சங்க இலக்கியப் பாடல்களில் காணக் கிடக்கின்றன. அவை, சங்ககாலத் தமிழ் நிலம் ஆண்ட முடியுடை மூவேந்தரும் தம்முள் பகை கொண்டு போரிட்ட போது, வேளிர் குடியினரின் போர்த் திறன் உணர்ந்து, அவர் துணை நாடியுள்ளனர் என்ற உண்மையினையும், தமிழக வரலாற்றில் வேளிர் மரபினர் பெற்றிருந்த பெருமையினையும், உணர்த்துவனவாக அமைந்துள்ளன.