பக்கம்:தமிழக வரலாறு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தமிழக வரலாறு


சங்கம் இல்லை. எனவே, அவன் கடைச்சங்க இறுதிக் காலத்தில் வாழ்ந்த பாண்டியன் உக்கிரப் பெருவழுதி காலத்திலும் பின்வந்த நெடுஞ்செழியன் காலத்திலும் வாழ்ந்தவன் ஆவன் அவன் தம்பியாம் இளங்கோவடிகளே சிலப்பதிகாரத்தை எழுதியவர் இவர்களைப் பற்றியும் இளங்கோவின் துறவு பற்றியும் கதைகள் வழங்குகின்றன. அவை அத்தனையும் உண்மை எனக் கொள்ள வேண்டுவதில்லை. செங்குட்டுவன் சிறந்த வேந்தனாய் மண்ணாண்டான் என்பதும். அவன் தம்பி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைத் தந்தார் என்பதும் பொருத்தும்.

இனி, அச்செங்குட்டுவனது வடநாட்டுப் படையெடுப்பில் அவனுக்கு உதவியவர் நூற்றுவர் கன்னர் என்றும், அவனை எதிர்த்தவர் கனக விசயர் என்றும் அறிகின்றோம். நூற்றுவர் கன்னரைச் ‘சதகர்னி’ என்பர் வரலாற்றாளர். கனக விசயர் கங்கைக் கரையில் வாழ்ந்தவர். செங்குட்டுவன் கோயில் எடுத்த காலை இலங்கையிலிருந்து கயவாகு வேந்தன் வந்திருந்தான் என்பர்.[1] அவனைக் கொண்டே தான் செங்குட்டுவன் காலத்தையும் சங்க காலத்தையும் மகாவமிசத்தின் மூலம் வரையறை செய்தனர். எனவே, செங்குட்டுவன் காலத்தில் இமயம் முதல் ஈழம் வரை நாடு நன்கு கலந்து வாழ்ந்ததென்றும், செங்குட்டுவனுக்கு அனைத்து எல்லையும் அறிமுகமாகி அடங்கியும், நட்புக் கொண்டும், நல்லுறவு கொண்டும் அமைந்திருந்தன என்றும் அறியலாம்.

இரும்பொறை மரபினுள் ‘யானைக்கட்சேய்’, ‘கணைக்கால்’ போன்ற சில அரசர் ஆண்டுள்ளனர்.


  1. சிலம்பு, 30;-அடி 160
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/132&oldid=1358365" இலிருந்து மீள்விக்கப்பட்டது