பக்கம்:தமிழக வரலாறு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத்துச் சமூக வாழ்வு

139


வாய்ப்புத் தாராமையின், அவர்தம் வாழ்வு வன் கண்மையாதாயிற்று. என்றாலும், அவர்கள் உள்ளத்திலும் ஈரம் உண்டு. பாலைப்பண் பாடிப் பாட்டிசைத்து, துர்க்கையை வாழ்த்தி வழிபட்டு, வருவோர்க்கெல்லாம் வாரி வழங்கித் தாமும் உண்டு வாழ்ந்த வாழ்வே அவர்களுடையது. அஞ்சித் தம்மை அடைக்கலம் புகுந்தோரை ‘அஞ்சேல்’ என்று ஆதரித்துக் காக்கும் அன்புளம் அவர்களுடையது; கடுங்கோடையில் காக்கும் அன்புளம் அவர்கள் பெற்றது. கடுங்கோடையில் காயும் வெயிலையும் பொருட்படுத்தாது விழாவாற்றித் தம்மை மறந்து வாழும் நல்வாழ்க்கை அவர்கள் மேற்கொண்டது. எனவே, அவர்தம் ஆறலைக்கும் வாழ்விலும் அமைதியும் அன்பும் குடிகொண்டன எனலாம்.

இவ்வாறு ஐவகை நிலத்தினும் தனித்தனியாக வாழ்வு நடத்தும் மக்களை முன்வைத்தே சங்க இலக்கியங்கள் எழுந்துள்ளன எனலாம். சிறப்பாக அகப்பொருள் பாடல்களெல்லாம் இந்த ஐந்திணைகளின் பாற்பட்டனவே. அவற்றில் வாழும் மக்களின ஒழுக்கத்தினை - கை கோளினை-வைத்தே இலக்கியங்கள் உருவாயின. கருத்தொருமித்த காதல் வாழ்வு இந்த ஐந்தினையின் பாற்பட்டதே. எந்த அகப்பொருட்பாடலும் இவற்றிற்கு அப்பாற் செல்லாது. எனவே, தமிழ் இலக்கியங்கள்—சிறப்பாகப் பெரும்பான்மையாய் உள்ள அகப்பொருள் இலக்கியங்கள்—இவ்வைந்திணை இலக்கியங்களேயாம்; ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகையில் மக்கள் வாழ்வை விளக்கிக் காட்டுவதாகும்.

மன்னரும் மக்களும்:

இவ்வாறு ஐவகை நிலத்தில் வாழ்ந்த மக்களும் அரசர் தம் ஆணையின் கீழ் இருந்துதான் வாழ்ந்தார்கள். தமிழ் நாட்டில் சங்க காலத்திலே வாழ்ந்த அரசர்களைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/141&oldid=1358390" இலிருந்து மீள்விக்கப்பட்டது