பக்கம்:தமிழக வரலாறு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

தமிழக வரலாறு


‘மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்’

என்று காட்டும் சமயநெறி பாராட்டத் தக்கது. மேலும், பெளத்த உண்மைகளை மிக அதிகமாக நூலின் பிற்பகுதியிற் கூறியிருக்கின்றார்; அறவண்டிகள் வாயிலாகவும் மணிமேகலை வாயிலாகவும் பலப்பல வாதப் பிரதிவாதங்கள் எழுப்பப் பெறுகின்றன. இறுதியில் பெளத்தமே அனைத்திற்கும் மேம்பட்டது என்ற முடிவும் காட்டப் பெறுகின்றது. இந்த வகையான மாறுபாடு தமிழ் நாட்டு வரலாற்றில் ஒரு திருப்பு மையமேயாகும். அன்று வளர்ந்த சமயப் போர்தான் பின்பு பெளத்த சமணப் போராகி, பின்னும் சைவ சமணப் போராகிப் பல்வேறு வழியில் வளர்ந்து நின்றது. எனினும் இவ்வாறு தமிழ் நாட்டில் சங்க கால இறுதியில், புகுந்த சமண பெளத்தம் இரண்டும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சைவ வைணவ சமயங்களால் அடியோடு அழிக்கப்பட்டன எனலாம். பிறகு அவை தலை தூக்கவே இல்லை.

இவ்வாறு தமிழ் நாட்டின் உச்ச நிலைக்கும் அடுத்து வரும் இருண்ட நிலைக்கும் இடையில் இக்காப்பிய காலம் ஒர் இடைவெளியாகி நின்று அந்த இருண்ட காலத்துக்கு இடம் உண்டாக்கித் தந்தது என்னுமாறு அமைந்தது என்பர் ஆய்வாளர்.

காப்பிய காலத்து மக்கள் வாழ்க்கை முறை பலவகையில் விரிந்துள்ளது. பெருநகரங்களாகிய புகார், மதுரை, வஞ்சி, காஞ்சி என்ற நான்கு நகரங்களையும் இவ்விரு காப்பியங்களும் பிணைக்கின்றன. அந்தப் பெருநகரங்களில் மக்கள் வாழும் வாழ்க்கை முறைகள் பலப்பலவாகும். கிராம மக்கள் வாழ்க்கையினை மதுரைப் பெரு வழியிலும், வேடுவர் வாழ்வினையும் குறவர் வாழ்வினையும் காட்டகத்தும், பேராற்றடைகரையிடத்தும் பல வகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/166&oldid=1358116" இலிருந்து மீள்விக்கப்பட்டது