பக்கம்:தமிழக வரலாறு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

213


குறிக்க வேண்டுமன்றோ? அந்த ஆண்டுக் குறிப்பில்தான் பல வரலாற்று உண்மைகள் பொதிந்து கிடக்கும் இன்ன வேந்தர் தம் ஆட்சிக் காலத்தில் இத்தனையாவது ஆண்டில் செய்யப்பட்ட தானம் அது என் மேலே தீட்டப் பெற்றிருக்கும். இன்ன பெயருடைய வேந்தன் என்னும் போது அவ்வேந்தனது வெறும் பெயரை மட்டும் குறிக்காது, அவன் பட்டம் பெற்று அதுவரை ஆற்றிய செயல்களையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அழகுபடத் தொகுத்து, பாமாலை போன்று உருவாக்கிப் பின் அத்தகைய வீரமும் நலமும் செறிந்த வெற்றி வேந்தனது ஆட்சி ஆண்டு இத்தனையாவதில் இன்னான் இன்ன வகைக்குச் செய்த அறம் எனக் குறித்திருக்கும். அவ்வாறு அரசர்தம் சிறப்புக்களையெல்லாம் கூறும் பகுதியை வரலாற்றாளர் ‘மெய்க்கீர்த்தி’ என்பர். அந்த மெய்க்கீர்த்திகளே இந்தப் பிற்காலச்சோழர் தம் பெருமையையும், ஆற்றலையும், வீரத்தையும், பிற சிறப்பியல்புகளையும் எடுத்துக் காட்டிக் கொண்டே இன்னும் அழியாவகையில் கோவில்களில் இடம்பெற்றுள்ளன.

எது மெய்க்கீர்த்தி?

இம் மெய்க்கீர்த்திகள் ஒவ்வோர் அரசனுக்கும் ஒவ்வொரு வகையில் அமைந்திருக்கும். பெரும்பாலும் ஒரு அரசனுடைய மெய்க்கீர்த்தி ஒரே வகையில் தொடங்கப் பெற்றிருக்கும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தொடக்கத் தொடர்கள் இருப்பதும் உண்டு. உதாரணமாக முதலாம் இராசராசன் மெய்க்கீர்த்திகள் ‘திருமகள் போல’ எனத் தொடங்கும். இராசேந்திரன் மெய்க்கீர்த்திகள் ‘திருமன்னி வளர’ என்றும், இராசா திராசன் மெய்க் கீர்த்திகள் ‘திங்களேர் தரு’ என்றும் தொடங்குவன. இந்த மெய்கீர்த்திகளின் வரிகள் ஒரே அளவில் முடிவுற்றன-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/215&oldid=1358595" இலிருந்து மீள்விக்கப்பட்டது