பக்கம்:தமிழக வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தமிழக வரலாறு


ருந்தது. எனினும், அடுத்து ஏழாம் நூற்றாண்டில் எழுச்சிக் காலத்தின் நாட்டு நிலையையும், சங்க கால நிலையையும், ஒத்து நோக்கும்போது அந்த இடைப்பட்ட மூன்று நூற்றாண்டுகளில் சமயத் துறையிலும், அரசியல் நெறியிலும் வேற்று மக்களது இடையீட்டால் எத்தனையோ மாறுபாடுகள் நிகழ்ந்திருக்க வேண்டுமென்று கொள்ளுதல் பொருத்தமானதாகும்.

பல்லவர் காலம் :

பல்லவப் பரம்பரையினர் நான்காம் நூற்றாண்டிலேயே தமிழ் நாட்டில் ஆளத் தொடங்கி விட்டனர் எனலாம். எனினும், அவர் தம் தெளிந்த–திருந்திய–ஆட்சி கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்புதான் வலுப்பெற்றது. சிவஸ்கந்த வர்மனால் தொடங்கப் பெற்ற பல்லவர் ஆட்சி, சுமார் இரு நூற்றாண்டுகளுக்குப் பின் மகேந்திர வர்மனால் விளக்கம் பெற்றது. சங்க காலத்துக்குப் பிறகு பல்லவர் தம் ஆட்சியே தமிழ் நாட்டில் சிறந்த வரலாற்றுக்குட்பட்ட ஆட்சியாய் விளங்கிற்று எனலாம். பல்லவர் காலத்திலே தமிழ் நாட்டில் கலையும் இலக்கியமும், காவியமும் ஓவியமும், சித்திரமும் பிற செம்மை நலன்களும் வளர்ந்ததோடு சமயங்களும் பல்வேறு போட்டிகளுக்கிடையில் வளர்ந்து வரலாயின. தமிழகத்தின் இருண்ட காலத்தில் தலை தூக்கி இருந்த பெளத்தமும் சமணமும் ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் சைவ வைணவ சமயங்களுக்கு இடந்தந்து ஒதுங்கி விட்டன. பல்லவர் காலத்திலே அதற்கு முன் தமிழ் நாட்டில் கண்டிராத வகையில் கற்கோயில்களும் கலைக் கோயில்களாகிய பல இலக்கியங்களும் தோன்றி வளர்ந்தன என்பதும் பொருந்தும். பல்லவர் காலம் தமிழ் வரலாற்றில் நிலைத்த இடம் பெற்ற காலமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/66&oldid=1357352" இலிருந்து மீள்விக்கப்பட்டது