பக்கம்:தமிழக வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

தமிழக வரலாறு


தெற்கையும் பிணைத்துப் பேசுகின்றன. பாண்டவ கெளரவ யுத்தத்திலே பொது நிலையில் நின்று போர்க்களத்தே உணவற்று வருந்தியவர்களுக்குச் சோறு அளித்து, ‘பெருஞ் சோற்று உதியன் சேரலாதன்’ என்ற சிறப்புப் பெயர் பெற்ற சேர மன்னன் ஒருவன் இருந்தான் என்பர், இன்னும் வடநாட்டுத் தென்னாட்டு மணவினைகளைப் பற்றி வழங்கும் கதைகளும் உள. அர்ச்சுனன் பாண்டியன் மகள் ஒருத்தியை மணந்தான் என்பர். இவை யாவும் வெறுங் கதைகளாகவே அமைகின்றமையின் இவற்றை நாம் வரலாற்றோடு பின்னிப் பிணைக்க வேண்டா. இவற்றை வரலாற்றோடு பின்னுவதும் பயனற்றதென்று ‘ஸ்மித்து’ என்பவர் திட்டமாகக் காட்டியிருக்கிறார்.

வடநாட்டு உறவு :

தமிழ் நாட்டுப் பொற்காலம் எனப்படுவது கடைச் சங்க காலமாகும். அந்தநாள் தொட்டு, அதாவது கி. பி. முதல் இரண்டாம் நூற்றாண்டு தொட்டு ஒருவாறு வரையறுத்த வரலாறு தமிழ் நாட்டுக்கு உள்ளது என்பதை யாவரும் அறிவர். எனினும் அதற்கு முன் தமிழ்நாடு சிறக்க வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை அக்காலத்துக்கு முன் எழுந்த பாடல்கள் நமக்கு விளக்கிக் காட்டுகின்றன. அவற்றுள் சில கி. மு. நான்கு ஐந்தாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த வடநாட்டு அரசர்களைக் குறிக்கின்றன. ஆயினும், தமிழ்ப் புலவர் சிலர் அப்பாடல்களை அவ்வாறு கொள்ளின் தமிழின் தொன்மை அத்துணைப் பழையதாகி விடுமே என்று மயங்கி அவற்றிற்குப் புதுப்பொருள்கள் கற்பிக்கின்றனர். அவ்வாறு தமிழில் வழங்கும் வடநாட்டு அரச பரம்பரைகள் இரண்டு. ஒன்று நந்தர் பரம்பரை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/98&oldid=1357669" இலிருந்து மீள்விக்கப்பட்டது