பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கண்டான். வில்நாணைக் காதுவரை இழுத்து இழுத்து அகன்ற அவன் மார்பையும்,வாளைப் பிடித்துப்பிடித்து வலுப்பெற்ற அவன் வலக்கையையும், அக் கையில் பிடித்திருக்கும் வாளின் கூர்மையையும் கண்ணுற்றான்.அவனுக்கு, அப்போது சிறந்த படைத்தலைவன் ஒருவன் வேண்டியிருந்தான். திருக்குட்டுவன் பிறந்த குடியாலும் பிறவற்றாமலும் சிறந்து விளங்கவே,' அவனைத் தன் படைத் தலைவனாக்கிக் கொண்டான். படைத்தலைவர்க்கு ஏனாதி என்ற பட்டம் அளித்து, அதற்கு அறிகுறியாக ஏனாதி என அழைக்கப்பெறும் மோதிரத்தை அணிவித்து, நாடும் ஊரும் நல்கிப் பெருமை செய்வதைப் பேரரசர்கள் பண்டே மேற்கொண்டிருந்தனர். இம்முறைக்கு 'மாராயம் பெற்ற நெடுமொழி எனப் பெயர் சூட்டுவர் ஆசிரியர் தொல்காப்பியனார். சோழவேந்தனும் அவ்வழக்கத் தையொட்டித் திருக்குட்டுவனுக்குச் "சோழிய ஏனாதி" என்ற பட்டத்தைச்சூட்டி, ஏனாதி மோதிரத்தை அவன் விரலில் அணிவித்து, ஏனாதிப் பட்டம் பெறும் படைத்தலைவர்க்குச் செய்யும் பற்பல சிறப்புக்களையும் செய்தான். அன்று முதல், திருக் குட்டுவன், "சோழிய ஏனாதி திருக்குட்டுவன்" என்றே நாட்டு மக்களால் அழைக்கப் பெற்றான்.

சோழர் படைத் தலைமையேற்றுக் கொண்ட திருக்குட்டுவன், சோழர் பேரரசின் பெருவாழ்வுக்குத் துணைபுரியும் பெரிய வெற்றிகள் பலவற்றைப் பெற்று அளித்தான். அப்பணியில் பல்லாண்டு வாழ்ந்த அவன் ஆண்டு முதிர்ந்து விடவே அமைதி வாழ்வை விரும் பினான். கடமையுணர்ச்சியிலேயே கருத்தைச் செலுத்தியிருந்தமையால் பிறந்த நாட்டு மண்ணை மறந் திருந்த அவன், அக்கடனாற்றி ஓய்வு பெற விரும்பிய அந்நிலையில், தாய்நாடு சென்று வாழத்துணிந்தான். அவன் பணியால் பெருவாழ்வு பெற்ற சோணாட்டு வேந்தனும், அவன் விரும்பிய அனைத்தும் அளித்து,