பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தமிழர் தோற்றமும் பரவலும்



கண்டுபிடிப்புக்கள், வெளிக்கொணரப்படாதிருந்திருந்தால், மேலே கூறிய கொள்கை மற்றும் அதற்கு இனமான கொள்கை, தெளிவற்ற நிலையிலேயே தொங்கிக்கொண்டிருந்திருக்கும். ஆங்குக் கண்டெடுத்தவற்றை அவற்றிற்குத் தகுதியுடையவாய, மிக்க விழிப்போடும் கருத்தோடும் ஆராய்ந்து பார்த்த, திருவாளர். சர். ஜான் மார்ஷல் (Sir. John Marshal) அவர்கள், சிந்துவெளிக் கண்டு பிடிப்புக்கள், உய்த்துணர வைக்கும் நாகரீகம், திராவிட நாகரீகத்தின் முத்திரையைப் பெற்றுள்ளதாகக் கருதியுள்ளார். இந்நாகரீகத்தின் இயல்பு பற்றி மூவகைக் கருத்துக்கள் உள்ளன. முதலாவது இந்நாகரீகத்தைத் திராவிட நாகரீகமாகக் கொள்ளும் திருவாளர் சர். ஜான் மார்ஷல் அவர்கள் கருத்து. இரண்டாவதாக இதை, இயல்பாலும் கால நீட்சியாலும், ஆரிய நாகரீகமாகக் கொள்ளும் வரலாற்று ஆசிரியர்களும் உள்ளனர். மூன்றாவதாக இந்நாகரிகம் திராவிட நாகரீகமோ, ஆரிய நாகரீகமோ அன்று: ஆனால் இன்றைய ஆய்வு அறிவுப்படி எந்த ஓர் இனம் அல்லது பழங்குடியினராக உறுதிப்படக் கூற இயலாது எனக்கூறும் மூன்றாவது கருத்தாம். இந்நாகரீகம் பெரும்பாலும் வேத காலத்துக்குப் பிற்பட்டது அல்லது சிறப்பு இயல்பால், கிட்டத்தட்ட தமிழர்களுடையது என்ற ஆய்வினை, மொழியியல் வழி உறுதி செய்வதில் உள்ள இயலாமையினை எல்லோரும் உணர்வர். இத்துறையில் அருள் திரு. தந்தையார் ஈராஸ் (Rel. F. Heras) அவர்களின் முயற்சி குறிப்பிடத்தக்கது. சுமேரிய, பாபிலோனியா, மற்றும் எகிப்து ஆகிய மேற்கிற்குச் சென்று பரவிய, பண்டைய நாகரீகத்தின் முதல் பிறப்பிடம். பஞ்சாப் முதல் பர்ஷிய வளைகுடா வரை பிரிந்து கிடக்கும் இடமாகும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதுபற்றிய மொத்தக்கேள்வி, ஐயத்திற்குஇடம் இன்றி, பெரும் குழப்பத்திற்கு உரியது. இன்று நாம் பொருத்தமுற மேற்கொள்ளவேண்டிய ஆய்விலும், பெரிய அளவிலான மறுக்க இயலாத, நுண்ணிய ஆய்வினைத் தேவைப்படுத்துகிறது.