பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

19


முடிவதில்லை. அதே வழியில்தான், இந்தியாவின் ஆரிய திராவிட நாகரீகங்களை மதிப்பிடல் வேண்டும். ஏறத்தாழ 1858 ஆண்டு அளவில், ஆரியன் என்ற நலங்கெட்ட இச்சொல், மதிப்புமிகு கீழ்த்திசை மொழி ஆய்வாளர், திருவாளர் மாக்ஸ் முல்லர் (Max Muller) அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மேதகு வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones) அவர்களைப் போலத் திருவாளர் மாக்ஸ் முல்லர் அவர்களும், ஆரியன் என்ற சொல், ஆரியமொழி பேசும் ஒரு மக்கள் கூட்டத்தைக் குறிக்கும், என்ற அளவோடு நின்றிருந்தால், உலக அமைதிக்குப் பாராட்டக்கூடிய பெருந்தொண்டு புரிந்தவராய் இருந்திருப்பார். ஆனால், போகூழ் செய்து விடுவதுபோல், திருவாளர் மாக்ஸ் முல்லர் அவர்கள், இணையான ஆரிய இனம் பற்றியும் பேசிவிட்டார். இத்தவறான கருத்து, ஏனைய தவறான கருத்துக்களைப் போலவே, மிகக் குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெற்று விட்டது. இக்கருத்தின் பின்விளைவு திருவாளர் மாக்ஸ் முல்லர் அவர்கள் “நான், ஆரியன் என்று சொன்னால் நான் இரத்தத்தையோ, எலும்பையோ, அல்லது மயிரையோ மண்டை ஓட்டையோ பொருள் கொள்ளவில்லை; ஆரியமொழி பேசும் மக்கள் என்பதே நான் கொள்ளும் பொருள். என்னைப் பொறுத்தவரை, நீண்ட சொற்பொருள் தொகுதி, அல்லது குறுகிய இலக்கணம் பற்றிப் பேசும், மொழி இயல் ஆய்வாளர் எத்துணைப் பாவியோ, அத்துணைப்பாவி ஆரிய இனம், ஆரிய இரத்தம், ஆரியக் கண், ஆரியமயிர் பற்றிப் பேசும், மனித இன ஆய்வாளனும்” என மறுவலும் மறுவலும், விளக்கம் அளிக்கும் அளவு அத்துணைப் பெரிதாம். (Biographies of words and the Home of the Aryans. London 1888. P 120) ஆனால் அவர் அறிவுரை காலங் கடந்தது. அக்கருத்து ஆழ வேர் விட்டு, உள்ளத்தை அழுந்தப் பற்றிக் கொண்டுவிட்டது. ஹெர் ஹிட்டலர் கையில் யூதர் அனுபவித்த அடக்குமுறைக் கொடுமை அதன் கொடிய விளைவுகளில் ஒன்று.