பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. தமிழர் நாட்டுப் பாடல்கள் உயிருள்ளதோர் வடிவம். வளருகிறது, மாறுகிறது, தேய்கிறது, சாகிறது. மீண்டும் புதைந்த நிலத்தில் பழைய உருமாறி புனருருவம் கொள்ளுகிறது. உருவத்தைப் பார்த்து, ஐயோ இது போய் விட்டதே என்று அழுகிற வேலை ஆராய்ச்சியாளனுக்கு வேண் டாம். ஒப்பாரி இப்பொழுது வழக்கழிந்து வருகிறது. இன்னும் 50 ஆண்டுகளில் ஒப்பாரியே இராது. அப்பொழுது, இப்பொழுதே எழுதிவைக்கப்பட்டவைதானே மிஞ்சும். இது fossil மாதிரி. அதற்குப் பரவுதல் இல்லை. புதிய எழுச்சி, இயக்கங்கள், பாமர மக்கள் வாழ்வில் உண்டானால், புதிய பாடல்கள் தோன்றும். அவர்கள் வாழ்க்கைக்குப் பயனற்றவை மறையும். மறைவதை எண்ணி ஒப்பாரி பாட வேண்டியதில்லை. புது நிலையை அறிந்து, புதுப் பாடல்களை வரவேற்க வேண்டும். சமூக மாறுதல், சமூக உணர்ச்சிகளுக்கேற்ற பாடல்களைத் தோற்றுவிப்பவன் நாட்டார் கவி. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் போல. அவர்களுடைய உணர்ச்சி, மதிப்புகள், நலன்களுக்கு ஏற்றாற்போல அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தகுதியுடையனவற்றை அவர் பாடினார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாட்டாரது போர் முழக்கமாயிற்று. அது நாட்டார் ரசனைக்காக மட்டுமல்லாமல், சினிமாப் பார்க்கிற எல்லா வர்க்கங்களுடைய அனுபவத்திற்காகவும் எழுதப்பட்டதால், நாட்டார் பண்பாட்டுக் கருவை, நாட்டார் மொழியிலும், சிறிதளவு இலக்கிய மொழியிலும் பாடினார். நாட்டுப் பாடல் எழுத்தறிந்தவர் அனுபவிப்பதற்காக உருமாறுகிறது. இதுவும் நாட்டுப் பாடலே. கலியாணசுந்தரம் பாடல்கள் நாட்டு மக்கள் உணர்வு, நாட்டு மக்கள் பண்பாட்டு மதிப்புக்கள், அவர்கள் ஆர்வங்கள் இவற்றை வெளியிடுகின்றன. ஆனால், மெட்டில் மட்டும் நாட்டுப் பாடலிசை கொண்டு, உள்ளடக்கத்தில் நாட்டு மக்களது உணர்விற்கும், ஆர்வங்களுக்கும் எதிரான கருத்துள்ள சினிமாப் பாடல்கள் எழுதப்படுகின்றன. அவை நாட்டு மக்களிடையே பரவுதல் இல்லை. நடுத்தர மக்களிடையேதான் பரவு கின்றன. நாட்டு மக்களிடையே பரவும், நாட்டு மக்களின் மதிப்புகள் தாங்கிய பாடல்கள்தான் நாட்டுப் பாடல்கள். சிவகாசிக் கலகம் பற்றிய பாடல்கள், கலகம் நடந்த இடத்தில், சிவகாசியிலும், அதனையடுத்த ஊர்களிலும் தோன்றியிருக்கலாம். சிவகாசியில் கலகம் நடப்பதற்கு பக்கத்து ஊர் மறவர்கள் வந்தார்கள். அவர்களில் சிலர் இறந்து போனார்கள். அவ்வூர்களிலும் பாடல்கள் தோன்றியிருக்கலாம். நாடார்களுக்கு ஆதரவாகவும், மறவர்களுக்கு ஆதரவாகவும், இருகட்சிக்கும் பொதுவாகவும் பாடல்கள் தோன்றியுள்ளன. சில பாடல்களைப்