பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை 5 பாடியவர்கள் பெயர்கள் தெரிகின்றன. ஆறுமுகம் என்பவர் ஒரு பாடலை எழுதியுள்ளார். இவை எங்கெங்கு கிடைக்கின்றன? சங்கரன் கோவில், சிவகிரி, விளாத்திக்குளம் முதலிய இடங்களில் 30, 40 மைல் தூரத்திலுள்ள ஊர்களில் கிடைக்கின்றன. கலகத்திற்கு பயந்து ஓடி வந்தவர்கள் இப்பாடலைக்கொண்டு வந்திருக்கலாம். இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பாடல் நீடித்திருக்கிறது. கலகம் நடந்தது 1896-ல், எண்பது வருஷங்களாகின்றன. இவை எழுதப்பட்டதால், அச்சிடப்பட்டதால் நிலைத்திருக்கிறது. போத் தையாவிற்குக் கிடைத்தது, ஓலைப் பிரதி. அந்த ஓலையைப் பார்த்துப் பாடுபவரும் வாழ்ந்திருந்தார். எனவே நாட்டுப்பாடல் என்றால் ஆராய்ச்சி செய்பவருக்காக யோசனை செய்து பாடப்படுவது அல்லது எழுதப்படுவது அல்ல. நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் எழுகிற உணர்ச்சியும், சிந்தனையும் பாடல் உருவத்தில் சிருஷ்டிக்கப் படுகின்றன. வாய் மொழிப் பரவுதலின்மூலம் அது நாட்டாரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வாய் மொழியால் மட்டும் சிறிது தூரம்தான் பரவும். அது ஒரு Localised Tradition ஆகவே இருக்கும். அச்சில் அதனையே வெளியிட்டால் அதன் பரப்பு தமிழகம் முழுவதும் இருக்கும். உதாரணமாக ஐவர் ராசாக்கள் கதை, ஒரு சிற்றூரில் மட்டுமே வழங்குகிறது. சில பகுதிகள் வள்ளியூரில் வழங்குகின்றன. எப்படியும் கதை நாஞ்சில் நாட்டுக்கு வெளியே தெரியாது. இதற்குக் காரணம் என்ன? கதை 400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு போரைப் பற்றியது. அதே வரலாற்று நிலைமைகள் இன்று இல்லை. குலசேகர மன்னனைப் போன்ற மன்னர்களோ கன்னட இளவரசி போன்ற இளவரசிகளோ இன்று இல்லை. எனவே பாத்திரங்களின் கலாச்சார மதிப்பு மாறிவிட்டது. எனவே கதை ஒரு வரலாற்று நினைவுக் கதையாக மட்டுமே எஞ்சி நிற்கிறது. வாழ்க்கைக்கு நேரடி சம்பந்தமில்லாமலிருக்கிறது. அந்த வரலாறும் பரவாமலிருப்பதற்குக் காரணம், வாய் மொழிப் பரவுதல். இப்பொழுது அக்கதை வில்லுப்பாட்டாகப் பாடப் படுவதில்லை. எனவே பரவுதலும் இல்லை: இனி அது மறைய வேண்டியதுதான்; இக்கலைச் சிருஷ்டியை, வரலாற்று மதிப்பை நிலைக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும்? இதை எழுத்தறிவு வட்டத்திற்குக் கொண்டு வரவேண்டும். அச்சிட்டுப் பரப்பினால், சுருங்கியவட்டம் விரிவடையும். மீண்டும் இது வாய்மொழிச் சுழற்சிக்குச் செல்லாது. இது Fossilஆகிவிட்டது. ஆய்விற்கும், அறிவதற்குமே பயன்படும்.