பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

466 தமிழர் நாட்டுப் பாடல்கள்

குறிப்பு: கோர்ட்-ஜனங்கள் கூடியிருக்கும் இடங்களுள் கோர்ட்டும் ஒன்று. கோயிலுக்கு என்று மேல் சாதிக்காரர்கள் பாடுவார்கள். ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கு கோயிலில் நுழையும் உரிமை இல்லாதிருந்ததால் அவர்கள் பாட்டில் கோயில் பொதுவாக இடம் பெறுவதில்லை.

சேகரித்தவர்: S.S. போத்தையா இடம்: நெல்லை மாவட்டம்.

போவதில்லை!

காதலர் உறவு வெளிப்பட்டது. அவளை வீட்டில் அடைத்துப் போட்டனர். சுடுசொல் பொழிந்தனர். உறவினர் எல்லோரும் கடுகடுத்தனர். சில நாட்களுக்குப் பின்னர் அவள் வயலுக்குச் செல்லுகிறாள். அவன் அவளைப் பின் தொடருகிறான். அவள் பேசாமலேயே முன் செல்லுகிறாள். அவன் பேச்சுக் கொடுக்கிறான்; அவள் கடுகடுப்பாக ‘என் முகத்தைப் பாராதே’ என்று கூறுகிறாள். அவனோ அவளை விடுவதாக இல்லை. அவள் வேலை செய்யும் நேரமெல்லாம் வரப்பிலுள்ள கல்லின் மேல் உட்கார்ந்திருக்கிறான். கடைசியில் அவள் நிமிர்ந்து 'உன்னால் பகை உண்டாகிறது போய் விடு' என்று சொல்லுகிறாள். அவனோ “என்ன பகையாகி விட்டாலும், உன்னை மணம் செய்து கொண்டுதான் ஊரைவிட்டுப் போவேன்" என்று சத்தியாக்கிரகம் செய்கிறான்.

ஆண்: ஒத்தடிப் பாதையிலே உன்னதமாப் போற புள்ளே ஒன்பது வகைப் பூத்தாரேன் என் முகத்தைப் பாரேண்டி

பெண்: பார்த்தனடா உன் முகத்தை பகைச்சனடா என் ஜனத்தை கேட்டனடா உன்னாலே கேளாத கேள்வியெல்லாம் கல்லோரம் காத்திருக்கும் கருத்தக் கொண்டை சிவத்தச்சாமி ஏனையா காத்திருக்கே? ஏகப்பகை ஆகுதையா!