பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை 11 யல்லாமல் இருப்பதற்காக வணிகர் குழுக்களை ஏற்படுத்தி அவற்றின் மூலம், மிகக் குறைந்த விலைக்குக் கைத்தொழிலில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்கினார்கள். இதனால் கைத்தொழிலாளிகளும் மிகுந்த ஏழ்மையில் உழன்றனர். ஏழ்மைநிலை பொறுமையின் எல்லையைத் தாண்டிய போது மக்கள் கிராம சமுதாய அமைப்பை எதிர்த்துப் போராடியுள்ளனர். இத்தகைய போராட்டங்களைப் பற்றி நாட்டுப் பாடல்களிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் அறிந்து கொள்கிறோம். இத்தகைய போராட்டங்கள் சிலவற்றைப் பற்றி இங்கு குறிப்பிடுவோம். நாடார்களது சாதி வரலாற்றை 'வலங்கையர் கதை' என்ற நூல் கூறுகிறது. அச்சாதியினர் ஏழ்மையுற்று பஞ்சத்தால் வாடிய காலத்தில் காவிரி அணை கட்டக் கூலியில்லாமல் வேலை செய்யும்படி உத்தரவிடப்பட் டார்கள். அரசனுடைய ஆணைப்படி கூலியில்லாமல் வேலை செய்யும் முறைக்கு வெட்டி என்ற பெயர் வழங்கப்பெற்று வந்தது. ‘வெட்டி முறையை எதிர்த்து ஏழு சகோதரர்கள் போராடினார்கள். அரசன் கரிகால் வளவன் ஆறு சகோதரர்களின் தலைகளைத் துண்டித்துவிட்டான். ஏழாவது சகோதரனும் கூடை எடுத்து மண் சுமக்க மறுத்தான். அவன் சிறுவனானதால் அரசன் அவனை நாடுகடத்தி விட்டான். அவன் தென்பாண்டி நாட்டிற்கு வந்து பனை மரத்தைப் பராமரித்துப் பெருஞ் செல்வம் அடைந்தான். இது நாட்டுக் கதைப் பாடல் ஒன்றில் காணப்படும், ஒரு போராட்ட நினைவு. பிற்காலத்தில் ஏழ்மையால் வருந்திய மக்கள் பற்பல இடங்க ளில் தங்களது உரிமையை நிலைநாட்டிக்கொள்ள இயலாமல், கோவிற் சுவர்களை இடித்தும் பத்திரங்களைத் தீக்கிரையாக்கியும் சுரண்டல் முறைக்கு எதிராகத் தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளார்கள். ஏனெனில் கோயில் மதில் சுவர்களில்தான் அவர்களை அந்நிலையில் வைத்திருந்த நிலமான்யமுறையின் பிரமானப் பத்திரங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. கோயில் சாசனங்களின் முகவுரையில் பின்வரும் குறிப்பு காணப்படுகிறது. ‘மூன்றாம் ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் ஐந்தாம் ஆண்டிலும் பரவிய கலகத்தில் ஊரில் உள்ளோருடைய நிலங்களின் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோக முறைப்படி நிர்ணயித்துப் புதிய பத்திரங்கள் வழங்க வேண்டிவந்ததென்று தஞ்சை ஜில்லா உடையாரூர்ச் சாசனம் கூறுகிறது.'