பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



222

தமிழர் நாட்டுப் பாடல்கள்

     பெண்:        ஒத்தடிப் பாதையிலே
                    ஒத்த வழிப் பாதையிலே
                    மின்னிட்டான் பூச்சி போல
                    முன்னே வந்தால் ஆகாதோ
    ஆண்:         கோடாலிக் கொண்டைக்காரி 
                    குளத்தூருக் காவல்காரி
                    வில்லு முதுகுக்காரி
                    நில்லேண்டி ஒண்ணாப் போவோம்

வெட்கம் பறந்து விட்டது. அவளும் அவன் தன்கூடவே வரச் சம்மதிக்கிறாள். ஆனால் அவன் பாதையை விட்டு கீழே இறங்கும்படி அழைக்கிறான். அவள் மறுத்து, 'திருமணமாகட்டும் உன்னோடு தட்டாங்கல் விளையாட எங்கழைத்தாலும் வருகிறேன் என்கிறாள்.

    பெண்:         சாயவேட்டி நிறச்சிவப்பு 
                    என்னைக் கண்டால் 
                    குறுஞ்சிரிப்பு குறுஞ்சிரிப்பும் 
                    தலையசைப்பும் கூட வந்தால் ஆகாதோ?
    ஆண்:         லோலாக்கு போட்ட புள்ளே 
                   ரோட்டு வழி போற புள்ளே 
                   ரோட்டை விட்டுக் கீழிறங்கு 
                   கேட்ட தெல்லாம் வாங்கித்தாரேன்
    பெண்:        உன் மனசு என் மனசு 
                   ஒரு மனசா ஆனாக்கால் 
                   சதுரகிரி மலையோரம் 
                   தட்டாங்கல்லு வெளையாடலாம்
     ஆண்:       கூடை இடுப்பில் வச்சு, 
                  கோகிலம் போல் போற பொண்ணே 
                  பேடை மயிலன்னமே 
                  பேசாயோ வாய்திறந்து?
     பெண்:      வாய்க்காலுத் தண்ணியிலே 
                  வண்டு வரும் தூசி வரும் 
                  கூடத்துக்கு வாங்களையா 
                  குளிந்த தண்ணி நான் தாரேன்