பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



224

தமிழர் நாட்டுப் பாடல்கள்

                   ஆட்டுக் கிடா சோறிருக்க 
                   அழுதுகிட்டு நானிருக்க 
                   வாடா விளக்கிருக்க 
                   வந்தவனத் தெரியலியே! 
                   புளிய மரத்தடியில் 
                   புள்ளையார் கோவிலோரம் 
                   சத்திரத்தின் வேம்போரம் 
                   சாமி தானோ நிக்கிறது? 
                   உயர்ந்த தலைவாசல் 
                   உல்லாச வல்ல வாட்டு 
                   நிறைந்த தலை வாசலில 
                   நிக்கிறதும் சாமிதானோ?

வட்டார வழக்கு: அருச்சல்-Urgent-அவசரமாக (திரிபு); கம்மாய்-பாசனக் குளம்(நெல்லை, ராமநாதபுரம் வழக்கு); நிக்கிறது -நிற்கிறது.

சேகரித்தவர்:
இடம்:
S.S. போத்தையா
நெல்லை மாவட்டம்


கண்டீர்களா?

காதலனைச் சில நாட்கள் காணாவிட்டால் காதலி தேடுவாள். காதலியைக் காணாவிட்டால், காதலன் தேடுவான். இவர்கள் மறுபடி சந்திக்கும்போது காணாமல் போனவன் அல்லது போனவளைத் தேடி அலைந்தது போல கற்பனைப் பாடல்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளுவார்கள். எல்லோரும் அறிய ஒருவரையொருவர் தேடி அலைய முடியுமா? ஆயினும் கற்பனையில் எங்கெல்லாமோ தேடி அலுத்ததாக மறு சந்திப்பின்போது ஒருவருக்கொருவர் கூறிக் கொள்ளுவார்கள். இவ்வகைப் பாடல்கள் ஆண்கள் பாடும் பாடல், பெண்கள் பாடும் பாடல் என இருவகையுண்டு. அவற்றுள் சில கீழே காண்க.

(ஆண்கள்பாடுவது)

                  வட்டம் போடும் வடக்குத்தெரு 
                  வந்து நிற்கும் தெற்குத்தெரு 
                  கூட்டம் போடும் கல்லுரலு 
                  குயிலும் வரக் காணலியே!