பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

காதல் 239

வட்டார வழக்கு: சீவம்-சீவன்; பச்சை-வயல் காடு; மசக்கம்-மயக்கம்; சதுரம்-சரீரம்: கயறாக-கயிறாக (பேச்சு); கொண்டுவாடி சோத்துக்கட்டை-அயலூர் போக ஏற்பாடு.


சேகரித்தவர்: : M.P.M. ராஜவேலு

இடம் துத்துக்குடி வட்டாரம், திருநெல்வேலி மாவட்டம்.


மேல் வட்டம் போடுகிறாள் தனது காதலனுக்கு கீழத்தெருவில் ஒரு பெண்னை அவனது பெற்றோர்கள் மணம் பேசுகிறார்கள் இவனுக்கு மேலத்தெரு மணம் பேசினார்களே தவிர முடிவாகவில்லை. ஆயினும் அப்பெண் இரை பிடிக்கக் கழுகு மேல் வட்டம் போடுவது போல இவனைப் பிடிக்க மேலத் தெருவிற்கு அடிக்கடி வேலையில்லாமலேயே போய்வர ஆரம்பித்தாள். அவனுடைய காதலி இச் செய்திகளையெல்லாம் அறிவாள். அவள் தனது தகப்பனுக்குத் கஞ்சிக்கலயம் கொண்டு குளத்தங்கரை வழியே செல்லுகிறாள். அவனை அங்கே கண்டும் முகங் கொடுத்துப் பேசவில்லை. அவன் அவளை பேச்சுக்கு இழுக்க முயலுகிறான். அவள் சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டு திரும்பாமல் போகிறாள்.


ஆண்:

கஞ்சிக்கலயம் கொண்டு

கரை வழியே போற புள்ளா

காக்கா அலம்புதடி

கருத்தக் குட்டி உன் கலயம்

வட்டுக் கருப்பட்டியே

வடநாட்டு மே மயிலே

சில்லுக் கருப்பட்டியே

தின்னாமல் போறேனடி

கண்ட கரம்பப்பொடி

காசி ராஜன் தந்த பொடி

உன் மாயக் கரம்பப் பொடி

என்னை மாறாட்டம் பண்ணுதடி

வெள்ள ரவுக்கக் காரி

வெகுநாளா உறவுக்காரி

ரவ்வு சொன்ன சொல்லாலே

ரம்பம் போட்டு அறுக்குதடி