பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282 தமிழர் நாட்டுப் பாடல்கள்

சகோதரிகள் மணப் பெண்ணைக் கேலிசெய்து பாடுவார்கள். உடனே மணப் பெண்ணின் உறவினர் மணமகனைக் கேலி செய்து பாடுவார்கள். இப்பாடல்கள் சில வேளைகள் தரம் குறைந்து ஆபாசமாகத் திகழ்வதும் உண்டு. பொதுவாக நகைச்சுவை நிரம்பியதாகவும், விவாதத் திறமையை வெளியிடுவதாகவும் இப்பாட்டுகள் அமையும்.

(மணமகன் கட்சியினர் பாடுவது)

தம் அண்ணனைக் கண்டு சரணமடைந்த அண்ணி நாழி அரிசி வடிக்கத் தெரியாத சோம்பேறி என்று அவளை ஏசுகிறார்கள் மணமகனது சகோதரிகள்.

நெய்க்கிணறு வெட்டி நிழல் பாக்கப் போகும் போது- என் அண்ணார் அழகைக் கண்டு பெண்ணாள் சரணமென்றாள் பால்கிணறு வெட்டி பல்விளக்கப் போகும் போது-என் அண்ணார் அழகைக் கண்டு பெண்ணாள் சரணமென்றாள் நாழி வரவரிசி நயமாய் வடிக்கிறியா? நாதேரிச் சிறுக்கிமகள் எங்கிருந்து வாச்சாளோ உழக்கு வரவரிசி உருவா வடிக்கிறியா ஊதாரிச் சிறுக்கி மகள் எங்கிருந்து வாச்சாளோ

வட்டார வழக்கு : வரவரிசி - வரகரிசி, உருவா- உருவாக நன்றாக வடிக்கிறியா?- வடிக்கத் தெரிகிறதா? நாதேரி, ஊதாரி-வசைச்சொற்கள்.

உதவியவர்: வாழப்பாடி சந்திரன் இடம்: வாழப்பாடி சேலம் மாவட்டம்.