பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணம் 285

இத்தனை நாளாக எதுக்காகக் காத்திருந்தான் இண்ணக்கிச் சமைஞ்சவளை எடுத்துப் போக வாராண்டி அம்மி மிதிச்சு அரசாணி சாட்சி வச்சி சந்திர சூரியனை சத்தியம் பண்ணிப் போட்டு தாய் மாமன் மகளுக்குத் தாலி கட்ட வாராண்டி

சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி இடம்:பரமத்தி, சேலம் மாவட்டம்.

பெண் அழைப்பு

தென்னையும் வாழையும் கட்டி அலங்கரித்த பந்தலிலே மணப்பெண்ணை அழைத்து வந்து உட்கார வைக்கிறார்கள்.

கல்யாணம் கல்யாணம் காரிழைக்குக் கல்யாணம் என்னைக்குக் கல்யாணம் இளங்கொடிக்கு கல்யாணம் சித்திரை மாதத்திலே சீர்பாகம் தேதியிலே ஞாயிறு திங்களுக்கு நல்ல புதன்கிழமை கல்யாண மென்று சொல்லி கடலேறிப் பாக்குமிட்டார் முகூர்த்தம் நடக்குதிண்ணு முடிமன்னர்க்குப் பாக்குமிட்டார் ஐம்பத்தாறு அரசர்க்கும் அருமையாய் சீட்டெழுதி வாழைமரம் பிளந்து வாசலெல்லாம் பந்தலிட்டார் தென்னை மரம் பிளந்து தெருவெல்லாம் பந்தலிட்டார்