பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310 தமிழர் நாட்டுப் பாடல்கள் ரூபாய் பரிசம் போட்டால், பெண்ணின் குடும்பச் சொத்து தன்னைச் சேரும் என்று நினைத்தான். ஆனால் கலியாணத்துக்குப் பின் அவளுக்குச் சொத்து எதுவும் கிடையாது என்று அறிந்தான். அதன்பின் அவளை அவன் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். மகனும் பெண் அழகாயில்லை என்ற சாக்கால் அவளை வெறுத்தான். மூவரும் தங்கள் கருத்தை ஒருவருக்கொருவர் வெளியிடும் நாடகக் காட்சியே பின்வரும் பாடல்கள். மாமனார்: முன்னூரு பரிசம் போட்டு முட்டாதாரு பெண்ணைக் கட்டி மோதிரம் போடலைண்ணு மூணு நாள அழுகுறாண்டி மருமகள்: பரிசமும் போடவேண்டாம் பந்தி பரிமாற வேண்டாம் ஏழை பெத்த பொண்னு நானு ஏத்துக் கோங்க மாமனாரே மகன்: உள்ளு வளசலடி உன் முதுகு கூனலடி ஆக்கங் கெட்ட கூலுக்கோ ஆசை கொள்வேன் பெண்மயிலே! வட்டார வழக்கு முட்டாதாரு-மிட்டாதார்; பந்தி பருமாற-விருந்துகள் வைக்க வேண்டாம்; பெத்த-பெற்ற, குறிப்பு: பெற்றோர் மடமையாலும் மோசத்தாலும் பெண் வாழ்விழந்து போகிறாள். சேகரித்தவர்: இடம்: S.M. கார்க்கி சிவகிரி, நெல்லை மாவட்டம். பொருத்தமற்ற மாப்பிள்ளை நல்ல உடல்நலமுள்ள உழைக்கும் வாலிபன் அவன். அவன் ஒரு பெண்ணைக் காதலித்தான். தன்னை மணந்து கொள்ளும்படி கேட்டான். அவளுக்கு அவனைப் பிடித்திருந்தது. ஆனால் அவனுக்கு சாய்ந்து உட்காரக் கூடச் சொந்த இடமில்லை. அவளுடைய பெற்றோர்கள் அவளை கொஞ்சம் பசையுள்ள குடும்பத்தில் ஒரு நோயாளிக்குக் கட்டிவைத்தார்கள். சில