பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328. தமிழர் நாட்டுப் பாடல்கள்

அஞ்சமாட்டார்கள். செவந்தி பெருமாள், தடிவீரன் போன்ற கீழ்ச்சாதி ஆடவர்கள் வன்னியர், மறவர் போன்ற உயர்சாதிப் பெண்களோடு காதலுறவு கொண்ட காரணத்தால், நாயக்க மன்னரது மண்டலாதிபனான வடமலையப்ப பிள்ளையன் என்பவரால் கொல்லப்பட்டனர். மதுரைவீரன், நாட்டுக்கு நற்பணி செய்திருப்பினும், அரசனது ஆசை நாயகி வெள்ளையம் மாளிடம் காதல் கொண்ட குற்றத்தால் கைகால்கள் துண்டிக்கப் பட்டு உயிரிழந்தான். இவ்வளவு கண்டிப்பாக கீழ்ச்சாதியினரின் ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் பெரிய மனிதர்களின் ஒழுக்கமோ என்றால்.....வேஷம். வெளி வேஷம்தான்.

 சம்பிரதி என்பது நாயக்கர் காலத்தில் பெரிய பதவி, அப்பதவி வகித்தவர் மகன் காட்டுச் சாதிப் பெண்ணை வைப்பாட்டியாகக் கொண்டுவந்து விட்டானாம்! அதை எள்ளி நகையாடுகிறார்கள் கிராம மக்கள்.

சைவன் சைவந்தான் சம்பிரிதி பிள்ளை மகன் கோம்ப மலை உத்திரத்தி கொண்டு வந்து சேத்தாரே.

வட்டார வழக்கு: உத்திரத்தி-வட திசையில் பிறந்தவள். குறிப்பு: கோம்பை, சிவகிரிக்கு வடக்கே உள்ளது. சேகரித்தவர்: இடம்: S.M.கார்க்கி சிவகிரி,

                    நெல்லை 
                    மாவட்டம்.
       கூனல் முதுகழகன்
  சொந்த நிலம் கொஞ்சம் உண்டு. அதனால் தன்னைக் குபேரன் என்று எண்ணிக் கொள்ளுவான். தோற்றத்தில் குரூபி. பாட்டு அவனை எப்படி வருணிக்கிறது என்று பாருங்கள்.
   சிவப்பிக்குக் காதலன் சிவத்தையாவென்று கூனனுக்குத் தெரியும். அவள் அவனையேதான் மணம் கொள்ள உறுதியோடிருக்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆயினும் அவளுடைய பெற்றோர்களைத் தன் பக்கம் இழுக்கச் சொந்த நிலம் என்ற தூண்டில் இருக்கிறதல்லவா? சிவத்தையாவுக்குச் சொந்தம் என்று சொல்ல கையும் காலும்தானே உண்டு. எனவே