பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



394

தமிழர் நாட்டுப் பாடல்கள்

அமைக்கவும், ரஸ்தாக்கள் போடவும், துறைமுகங்கள் கட்டவும், ஆலைகள் கட்டவும், சுரங்கங்கள் தோண்டவும், அவர்கள் தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு மட்டுமல்லாமல், பம்பாய் முதலிய நகரங்களுக்கும், கடல் கடந்த சீமைகளுக்கும் சென்றார்கள். அங்கெல்லாம் உழைத்து உழைத்து அவர்கள் கண்ட பயன் ஒன்றுமில்லை.

கிராமத்திலிருந்த சுரண்டல் முறை வேறு, நகரங்களிலுள்ள சுரண்டல் முறை வேறு. அங்கே எஜமானர்கள் வேறு. இங்கே எஜமானர்கள் வேறு. முதலில் சிறிதளவு சுதந்திரம் இருப்பது போல் தோன்றினும் பின்னர் அது கானல்நீர் என்று உணர்ந்தனர்.

இவ்வாறு வயல்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும், சுரங்கங்களிலும் உழைத்துவரும் தொழிலாளர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. இருள் நீங்கி ஒளி தோன்றும் காலத்தை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். வருங்கால நல்வாழ்வில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைதான் சமூகக் கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளும் மனவுறுதியை அவர்களுக்குக் கொடுக்கிறது. அவர்கள் பாடும் நாட்டுப் பாடல்களில் அன்பு மலர்வதையும், உழைப்பில் ஆர்வத்தையும், நன்மையில் பற்றையும், தீமையில் வெறுப்பையும் நாம் காண்கிறோம். அவர்களது எளிய பாடல்கள் அவர்களது இன்ப துன்பங்களையும், நெஞ்சக் குமுறல்களையும், ஆசாபாசங்களையும், விருப்பு வெறுப்புகளையும் வெளியிடுகின்றன.

இத்தகையத் தொழில் பாடல்கள் நகர வாழ்க்கையின் போலித் தன்மையாலும், தொழில் முறைகளின் கடுமையினாலும், படிப்படியாக மறைந்து வருகின்றன. கிராமங்களில் மட்டும் பரம்பரையாக வளர்ந்த கலை மரபுகளால் பாதுகாக்கப் பட்டு, குற்றுயிரும், குலை உயிருமாக இப்பாடல்கள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. மிக விரைவாக சேகரிக்கப்பட்டாலன்றி இவை மறைந்து போவது உறுதி.

இத் தொகுப்பில் ஏற்றப் பாட்டுகள், பொலிப்பாட்டு, உழவுத் தொழிலோடு தொடர்புடைய பாடல்கள், வலைஞன் பாடல்கள், வண்ணார் பாட்டு, வண்டியோட்டிகளது பாடல்கள், உப்பளத்தார் பாடல்கள், தேயிலை தொழிலாளர் பாடல்கள் முதலியவை இடம் பெற்றுள்ளன. இதில் சேர்க்கப்படாத தொழில்களைப் பற்றிய பாடல்கள் சேகரித்து இனி வெளியிடப்பட வேண்டும்.