பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உழவும் தொழிலும்

395


உழவுக் காளை

மனிதன் வேட்டையாடி வாழ்ந்த காலம் மாறுவதற்குக் காரணமாக இருந்தது, அவன் காளைகளைப் பழக்கி உழுவதற்கு கற்றுக் கொண்டதே. அவ்வாறு உழுவதற்குப் பயன்பட்ட மாடுகள் அவனுக்கு நிலையாகத் தங்கும் வாழ்க்கையைச் சாத்தியமாக்கிற்று. அவனுக்குச் செல்வமும் பெருகிற்று. எனவே 'மாடு” என்ற சொல்லுக்கே செல்வம்' என்ற பொருள் வந்தது.

மாட்டைக் கவர்ந்து சென்று செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று அதனைப் பழக்கத் தெரியாதவர்கள் பழங்காலத்தில் எண்ணினர். பழக்கத் தெரிந்தவர்களோ மாட்டைப் பாதுகாக்கப் போராடினர். இதனையே வெட்சி என்றும், ‘கரந்தை' என்றும் புறப் பொருள் இலக்கண நூல்கள் கூறுகின்றன.

பிற்கால மன்னரும் இவ்வழக்கத்தைப் பின்பற்றியே, ஒரு நாட்டின் பசு நிரையையும், காளைகளையும் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றால், நாட்டையும் கைப்பற்றலாம் என்றெண்ணி னர். நாட்டின் கால்நடைச் செல்வம் போய் விட்டால் உழவுத் தொழில் முடங்கிவிடுமல்லவா?

சிற்சில பண்டைக் குழுவினர் காளையை, நந்தியென்றும், பசவன் என்றும் வணங்கினர். சமண மதத்தினர் ரிஷபதேவர் என்று முதல் தீர்த்தங்கரருக்குப் பெயரிட்டு காளையை அவரது அடையாளமாக்கினர். பிற்காலச் சைவம், அதனைச் சிவனுக்கு வாகனமாக்கியது. மனிதன் காட்டுக்காளையை பழக்கி தனது வேலைக்குப் பயன்படுத்தியதையே புராணக் கதை இவ்வாறு சொல்லுகிறது.

தற்காலத்திலும் உழவுக்குப் பயன்படும் காளையை உழவர்கள் போற்றுகிறார்கள். முதல் உழவுக்கு நாட் செய்யும் போது அதனை அலங்கரித்து, பிள்ளையாருக்கு பூசைப் போட்டு உழத் தொடங்குகிறார்கள்.

காளைகளுக்குச் செய்யும் அலங்காரங்கள் எவை என்று தெரிய வேண்டுமா? இப்பாட்டைப் படியுங்கள்.

மின்னேரு எருதுக்கெல்லாம்
என்ன என்ன அடையாளம்
நெத்திக்கு சிட்டிகளாம்
நெலம் பார்க்கும் கண்ணாடி