பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

428

     தமிழர் நாட்டுப் பாடல்கள்

   செல்லச்சாமி விட்ட புஞ்செய் 
   மாசிப் பருத்தியடி 
   மலையோரம் செம்பருத்தி 
   ராசிப் பொருத்தமில்லை 
   ராமருட வாசலிலே 
   பருத்தி எடுக்கவேணும் 
   பச்சைச் சீலை எடுக்கவேனும் 
   ரயில்வண்டி ஏறவேணும் 
   ராமேஸ்வரம் போகவேனும்


  சேகரித்தவர்:           இடம்: S.S. போத்தையா       கோவில்பட்டி,
                        நெல்லை.


            புன்செய் உழவு


    மூன்று ஏர்கள் உழுகின்றன. இரண்டாவது ஏருக்குக் கழுத்தேரு என்று பெயர். முதல் ஏருக்கு முன்னத்தி ஏர் என்றும் கடைசி ஏருக்கு பின்னத்தி ஏர் என்றும் பெயர். எட்டிலிருந்து புன்செய்க் காடு தூரத்தில் இருந்தால், கலப்பையி லுள்ள மேழியையும், கலப்பைக் குத்தியையும் நுகத்தடி மீது ஏற்றி காளை பூட்டி ஓட்டிச் செல்லுவார்கள். புன்செயை அடைந்ததும் கலப்பையை இறக்கி, வடத்தை இழுத்துக்கட்டி நேராக்கி உழத்தொடங்குவர்.
    மூன்று உழவர்களில் ஒருவனுக்குக் காதலி உண்டு. அவள் வேலைமுடியும் சமயம் வந்து ஓடைக்கரை கருவ மரத்தடியில் உட்கார்ந்து அவனைப் பார்த்துப் பேசிவிட்டு போவாள்.
    இன்று ஏர் கட்டுமுன்பே அவள் வந்து விட்டாள். அடுத்த ஏர்க்காரன் காதலனிடம் சாடையாக அதனைக் கூறுகிறான். அவன் அதனைத் தெரிந்திருந்தான். எனவே அவளை அனுப்பி விட்டு வருவதாகச் சொல்லி அவனிடம் ஏரைப்பூட்டச் சொல்லிவிட்டு ஓடுகிறான்.
    துணைவர்கள் பொறாமையின்றி கெளரவமாக காதலர்களுக்கு உதவி செய்வதை நாட்டுப் பாடலிலும் கிராம வாழ்க்கையிலும் இன்றும் காண்கிறோம்.