பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

436 தமிழர் நாட்டுப் பாடல்கள்

  சில உப்பளங்களில் கங்காணிகளின் தடபுடல் அதிகமுண்டு. அவனிடம் நிரம்பக் காசு பணம் இருக்கும். அதிகாரம், உருட்டல், மிரட்டல், டம்பம் இவை யாவையும் அவன் அப்பாவித் தொழிலாளிகளிடம் காட்டுவான். ஆனால் அவன் உழைத்து பிழைக்கவில்லை. உழைப்பவர்களைப் பிடித்து வந்தால் உப்பள முதலாளி அவனுக்கு காசு கொடுப்பான். இதை உணர்ந்த தொழிலாளி மற்றவர்களுக்குக் கூறுகிறான்.
   கங்காணி கங்காணி 
   கருத்தச் சட்டை கங்காணி
   நாலு ஆளு வரலேன்னா
   நக்கிப் போவான் கங்காணி

வட்டார வழக்கு: குணுக்கு-உருண்டையாகத் தெரியும் காதணி, வைரக்கம்மல்-உண்மையில் வைரமல்ல. சேகரித்தவர்: இடம்: M.P.M. ராஜவேலு தூத்துக்குடி வட்டம்.

     மில்லாபீசு
  பழைய தொழில்களில் மனிதனது தசைநார்களே உழைக்கச் சக்தியாகப் பயன்பட்டது. உதாரணமாக நெசவு செய்ய வேண்டுமானால் நெசவாளி கையையும் காலையும் வருத்தி உழைக்க வேண்டும்.
  கோவில்பட்டியிலிருந்து பிழைக்கச் சென்ற நிலமிழந்த உழவர்கள் மில்லில் வேலைக்குச் சேருகிறார்கள். அவர்களுக்கு மில்லில் உள்ள இயந்திரங்களும், அவர்களை வேலை வாங்கும் இஞ்சினியரும் புதுமையாகத் தோன்றுகின்றன.
  ஏதோ ஒரு 'சூச்சியத்தை' தட்டிவிட்டால் தன்னாலேயே ரோதை உருளுகிறது. அதை ஒடச்சொல்லிவிட்டு நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார் இஞ்சினியர்.
  அவனது வியப்பு இப்பாடலாக உருவாகிறது.
   கடலுக்கு நேர் மேக்கே 
   காரக்கட்டிடம் மெல்லாவுசு
   இரும்புனால ரோதைகளாம் 
   இருகரையும் சூச்சியமாம்