பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாாி

565




ஆளக் கெணறு வெட்டி
ஆடிக் கெணறு செட்டெறக்கி
ஆழமிண்ணு பாக்காம-என்னை
அமுத்தினாங்க கங்கையிலே


சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

பிறந்த வீடு

தெளிந்த தண்ணீரைக் குடித்து தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். அத்தகைய தண்ணீரில் ஒரு ஒணான் செத்து மிதந்தால் குடிக்க மனம் வருமா? அதை ஒதுக்கிவிட வேண்டியது தானே. கணவனில்லா புக்ககமும் அதே போன்றதுதான். கணவனின் மறைவினால் வண்டல் கலங்கிய தண்ணீரெனக் காட்சியளிக்கிறது புருஷன் வீடு. பிறந்த வீடு செல்லத் தீர்மானித்து விட்டாள்.

தெற்கு மழை பேயும்
தென் பெண்ணைத் தண்ணி வரும்
தென் பெண்ணைத் தண்ணியிலே
தெண்டல் படிஞ்சிருக்கு
தெண்டல ஒதுக்கிடுங்க-நான் பொறந்த
தென் மதுரை பார்க்கப் போரேன்
வடக்க மழை பேயும்
வாணியாத்து தண்ணி வரும்
வாணியாத்து தண்ணியிலே
வண்டல் படிஞ்சிருக்கு
வண்டலை ஒதுக்கிடுங்க-நான் பொறந்து
வளர்ந்த மனை பார்க்கப் போறேன்

வட்டார வழக்கு: தெண்டல்-ஓணான்; வண்டல் -களி மண், இலை மக்கு.

சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

அணைந்த விளக்கு

கணவனை இழந்த கைம்பெண் புலம்பியழும் ஒப்பாரி பாடல் இது.