பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கோடங்கிப் பாட்டு

கோணங்கிகள் குறி சொல்லுவார்கள். கிராமத்தில் உடல் நோய் கண்டவர்கள் கோணங்கியை வருவித்து குறி கேட்டார்கள். இவர்கள் மாடன், கறுப்பன், முனியன், காளி, மாரி போன்ற சிறு தெய்வங்களின் தெய்வங்கொண்டாடிகளாக இருப்பார்கள்.

சிறு நோயாக இருந்தால், கோணங்கி திருநீறு மந்திரித்துப் பூசுவார்கள். கடுமையான நோயாக இருந்தால் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பூசைபோட்டுக் குறி கேட்டு பரிகாரம் சொல்லுவார்கள்.

பூசையில் ஒரு வாழையிலை விரித்து, அவல் பொரிகடலை பரப்பி, விளக்கேற்றி, தேங்காய் உடைத்து, உடுக்கடித்து 'சாமி' வருத்துவார்கள்.

கையில் பிரம்பு அல்லது வேப்பங்குழை ஏந்தி, நோயா ளியை உட்கார வைத்து அதை அவன் முன்வீசிப் பாட்டுப் பாடுவார்கள்.

பாட்டின் முதல் பகுதியில் சாமியை வீட்டுக்கு வர வேண்டுமென வேண்டிக் கொள்ளுவார்கள். சாமி வந்ததும், உடல் நடுங்கி ஆடிக் கொண்டே, சுவாமி சொல்லுவதாக நோய்க்குக் காரணத்தைச் சொல்லுவார்கள். பின்னர் சாமி நோயைக் குணப்படுத்த ஒரு சேவலோ, தங்கநகையோ, சுங்கடிச்சேலையோ தர வேண்டுமெனக் கேட்கும்.

சில நாள் பூசைபோட வேண்டுமெனவும் கேட்கும். மதுவிலக்குச் சட்டம் வருமுன் சாராயம் கேட்பதுமுண்டு. சட்டம் வந்ததும் குடி வழக்கத்தை சாமிகளும் கைவிட்டு விட்டனர் போலும். ஏனெனில், இப்பொழுது சாராயம் கேட்பதில்லை.

இடையிடையே யாராவது பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டுவிட்டால், சாமி உடனே எல்லை தாண்டி மலையேறிப் போய்விடும்.