பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நடு நாயகச் சிந்தனையிலிருந்து கிளைகளாகப் பிரிந்து தன்னுடைய தத்துவம் முழுவதையும் உதாரணங்கள் மூலம் பாரதி வெளிப்படுத்துகிறான்.

பாரதிசாக்தேயன், சக்தி அவன் அதிதேவதை, புராதனக் கிரேக்கர்களின் இயற்கை வணக்கம் அவனுடைய மதத்தில் ஒரே அம்சம். இதனால் பெருங்கடலைக் கலக்கும் காற்றின் வலிமையையும் மேகங்களை மோத விடும் காற்றின் ஆற்றலையும் பாரதி கண்டு வியப்புற்று காற்றினை வணங்குகிறான்.

‘காற்றுக்குக் காதில்லை.
அவன் செவிடன்.
காதுடையவன் இப்படி இறைச்சலிடுவானா?
காதுடையவன் மேகங்களை ஒன்றொடொன்றுமோதவிட்டு,
இடி இடிக்கச் சொல்லி வேடிக்கைப் பார்ப்பானா?
காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா?

காற்றை, ஒலியை, வலிமையை வணங்குகிறோம்.’

பாலைவனத்தில், ஒட்டகைக் கூட்டங்களும், மனிதர்களும், புழுக்கள் போல் காற்றின் வலிமையால் மணலில் புதையுண்டு சாகின்றனர்.

‘அவன் செயல்கள் கொடியன’

என்று காற்றின் அழிக்கும் ஆற்றலைப் பற்றி தன் கருத்தைப் பாரதி கூறுகிறான்.

இனி புராணக் கதைகளில் வரும் காற்றின் பரம்பரையைக் கூறுகிறான்.

‘வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்.
உயிருடையன வெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்’

காற்றே உயிர் என்ற சித்தர் கருத்தை இங்கு பாரதி வலியுறுத்துகிறான்.

111