பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன்னுடைய உழைப்பினால் பயன்தரும் பழத்தைத் தொடக் கூடாது ன்று அண்ணி சொல்லுவதை எண்ணி நல்லதங்காள் வருந்துகிறாள். அவளுடைய மான உணர்ச்சியை மூளியலங்காரி புண்படுத்துகிறாள். இதனைத் தாங்க முடியாமல் அவள் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி தானும் விழுந்து விடுகிறாள். உண்மையறிந்த நல்லண்ணன் தன் மனைவியைக் கொன்றுவிடுகிறான்.

இக்கதை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூத்தாக நடிக்கப்பட்டது. பெண்களுக்குப் பிறந்தகத்தில் சொத்துரிமையில்லாததால் வரும் அவதிகளை இக்கதை விவரிக்கிறது. உரிமையற்றவளாக அடிமையிலும் இழிவானவளாக, தான் பிறந்த வீட்டில் தானும் உழைத்து உருவாக்கிய நலன்களில் பங்கில்லாதவளாக உழலும் தமிழ்நாட்டுப் பெண்களின் பிரதிநிதி நல்லதங்காள். இச்சமூக அமைப்பு முறையில் பலியானவள் நல்லதங்காள்.

சின்ன நாடான் கதை

சின்ன நாடான் கதை, சொத்துரிமை சமுதாயத்தில் வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானதென்று. அதைப் பாதுகாக்க மகனைக் கொல்லவும் தந்தை துணிவான் என்பதைப் புலப்படுத்துகிறது.

சின்ன நாடான் கதை உண்மையான நிகழ்ச்சி. ஐந்து சகோதரர்களில் ஒருவனுக்கு மட்டும் ஆண்பிள்ளை பிறந்தது. அவன்தான் சின்னநாடான் என்ற குமாரசுவாமி. ஐந்து சகோதரர்களும் பண்ணையார்கள். அவர்கள் அனைவருடைய சொத்துக்களும் இவனையே சேர வேண்டும். பதினாறு வயதில், இவனுக்கு இரண்டு வயதான தங்கள் சகோதரியின் மகளை மணம் செய்து வைத்தார்கள். சகோதரியின் புருஷனுக்கும் ஏராளமான நிலபுலன்கள் உண்டு. குமாரசுவாமி இளைஞனானான். ஐயம் குட்டி என்ற நாவித குல மங்கையைக் காதலித்தான். தைரியமாக அவளோடு கூடி வாழ்ந்தான். அவனது குழந்தை மனைவி பக்குவமடையவில்லை. அதுவரை அவரது தந்தையும், சிறிய தந்தைமாரும் இவ்விஷயம் தெரிந்தும் தெரியாதது போலிருந்து விட்டார்கள். குழந்தை மனைவி பெரியவளானவுடன்,

128