பூங்குவளைப் போதில்
பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து
சீர்த்த முலைப்பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும்
வள்ளற் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம்
நிறைந்தேல் ஓர் எம்பாவாய்’
ஆயர் மகளிர் விரும்பும் செல்வம் எதுவென்று ஆண்டாள் செய்யுளில் குறிப்பிடுகிறாள். இச்செல்வத்தைப் பாவை தருவாள். அவள் தருவதற்கு, ஆயர் மகளிர் தங்கள் உடல் வருந்த நோன்பு நோற்கிறார்கள். பூமி செழிப்பைத் தருவதற்கு இவர்கள் உடலை வருத்துவானேன்? இவ்வினாவிற்கு விடைகாண தொல்குடி மக்களின் உலகக் கண்ணோட்டத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இயற்கையின் இயக்க விதிகளைத் தொல்குடி மக்கள் அறிந்தவர்களல்லர். கூட்டுழைப்பினால் அவர்கள் இயற்கையோடு போராடினார்கள். போராட்டத்தின் முதல் வெற்றியே புன்செய்ப் பயிர்த்தொழில். அதற்கடுத்த வெற்றி ஆடுமாடுகளைப் பழக்கியது. மனிதன் தனது செயலால் இயற்கையினின்று தனக்குத் தேவையானவற்றைப் பெற முடியுமென்று கண்ட தொல்குடி மக்கள் இயற்கை விதிகளோடு எவ்விதத் தொடர்புமில்லாத தங்களது செயல்களால் இயற்கையை வசப்படுத்த முடியுமென்று நம்பினார்கள். இடிமுழக்கம் போன்ற ஓசைகளை எழுப்பிக் கூத்தாடினால், தங்களைப் பார்த்து இயற்கையும் மழையைப் பொழியும் என்று எண்ணினார்கள். அதற்காக ஒரு கூத்தும் வகுத்துக் கொண்டார்கள். காற்றிலிருந்து பயிரைப் பாதுகாக்கக் காற்றில் அசைந்தாடுவதுபோல் நடனமாடி அதைப்போலப் பயிரையும் ஆடும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அசைந்தாடினால் காற்று பயிரை வேரோடு பிடுங்கி எறியாது என்பது அவர்கள் நம்பிக்கை. உலக முழுவதிலும் இத்தகைய வழக்கங்கள் இருந்திருக்கின்றன. தொல்குடி மக்களினத்தவர் பலரிடம் இத்தகைய வழக்கங்களைக் காணலாம். இதனை நாம் (Magic) மந்திரம்
12