பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சோழர் ஆட்சியில்
அறப் போர்கள்

தமிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து நின்ற பேரரசு சோழப் பேரரசு ஆகும். அது கி.பி. 846 முதல் 1281 முடிய நிலவியிருந்தது. பல்லவர் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் கி.பி.846ல் தனி அரசை நிறுவினான். அவனது மகனும் பெயரனும், தொண்டை நாட்டையும், பாண்டிய நாட்டையும் போரில் தோற்கடித்துக் கைப்பற்றினார்கள். அதற்குப் பின் பட்டம் பெற்ற அரிஞ்செயன், சிங்கள நாட்டின் மீது படையெடுத்துச் சென்று போரிட்டான். ராஜராஜன், கங்கை பாடி, நுளம்பாடி, வேங்கைநாடு இவற்றை வென்று சோழ சாம்ராஜ்யத்தை விசாலப்படுத்தினான். அவனது மகன் ராஜேந்திரன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் போரிலேயே கழித்து இடைத்துறை நாடு, வனவாசி, கோசலம், விராடம், வங்காளம் ஆகிய நாடுகளைக் கைப்பற்றினான். சோழரது படை வலிமை குன்றியவுடன் இந்நாட்டு மன்னர்கள் தாங்களே சுதந்திரமாக ஆட்சி நடத்தத் தலைப்பட்டனர். இராஜேந்திரனுக்குப் பின்பு பட்டமெய்திய மூன்று சோழ மன்னர்கள் தங்களின் முன்னோர்களின் வெற்றிகளை உறுதிப்படுத்தப் பல போர்களில் ஈடுபட்டனராயினும், வட புல நாடுகளை அதிக நாட்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்க முடியவில்லை. கி.பி.1070 முதல் 1120 வரை தமிழ்நாடு முழுவதையும் தெலுங்கு நாட்டின் பெரும் பகுதியையும் ஆண்டு வந்த முதல் குலோத்துங்க சோழ தேவன் வனவாசி, கலியாணபுரம், கன்னியாகுமரி, கோட்டாறு, தென்கலிங்கம், வடகலிங்கம் ஆகிய நாடுகள் மீது போர் தொடுத்து வென்று ஆண்டு வந்தான். அவனது வெற்றிகளின் பயனை அவனது மகன் விக்கிரம சோழனும், அவனது பெயரன் குலோத்துங்க சோழனும் அனுபவித்தார்கள். இராஜேந்திரனுடைய காலத்திற்குப் பின்பு குலோத்துங்க சோழனுடைய காலத்தில்தான் சோழ சாம்ராஜ்யம் அதிகப் பரப்புடையதாய் இருந்தது. முதல் குலோத்துங்கன் கலிங்கத்துப் பரணியின் தலைவன். விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கன்,


19