உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இரண்டாம் இராஜராஜன். மூவரும் ஒட்டக்கூத்தர் பாடிய ‘மூவருலா’வின் தலைவர்கள். இரண்டாம் இராஜராஜனுக்குப் பின் பட்டமெய்திய சோழ மன்னர்கள் காலத்தில், வெளிநாட்டு மன்னர்கள் சோழ நாட்டிலும் படையெடுத்து வந்தார்கள். சிற்றரசர்கள் கலகம் விளைவித்தார்கள். பாண்டியர்கள் முத்துச் சலாப வருமானத்தாலும், அராபிய வர்த்தகத்தாலும் தமது படைபலத்தைப் பெருக்கிக் கொண்டு சோழ நாட்டின் மீது படையெடுத்தார்கள். மாறவர்மன் சுந்தர பாண்டியனும், சடைய வர்மன் சுந்தர பாண்டியனும் நடத்திய இறுதிப் போர்களால் சோழ சாம்ராஜ்யம் சரிந்து விழுந்தது.

இதுவே சோழர் காலத்துச் சரித்திர சுருக்கம். ஒவ்வொரு சோழ மன்னனும், சாம்ராஜ்ய விஸ்தரிப்புப் போர்களில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டு இருக்கிறார்கள். இவ்வாறு பெரும் போர்களை நடத்துவதற்கும் போரிட்டு வென்ற நாடுகளை அடிமைப்படுத்தி வைப்பதற்கும் சோழ மன்னர்கள் பெரும்படைகளை வைத்திருந்தனர்.

சோழர் கல்வெட்டுகளில் மூவகை நிலைப்படைகளைக் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. வலங்கைப் படை, இடங்கைப் படை, மூன்று கை மகாசேனை என்ற மூன்று படைப் பிரிவுகள் இருந்தன என்று கல்வெட்டுக் குறிப்புகளால் தெரிகிறது.

இப்படைகளுக்கு வேண்டிய உடை, உணவு முதலியவற்றையும், படைக் கலங்களையும், யானை, குதிரை முதலிய ஊர்திகளையும் சேகரித்துத் தருவது மன்னனது கடமையாக இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் படைவீரர்களது குடும்பங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மன்னனே ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. ஏனெனில் அக்காலத்தில் போர்வீரர்களுக்கு மாத ஊதியம் அளிப்பதில்லை. நிலங்களையோ, நிலங்களின் வருமானத்தில் வரும் ஒரு பகுதியையோ, மானியமாகவும், கடமையாகவும், அக்குடும்பங்களுக்கு அளிப்பதுண்டு. கோயில் வருமானத்தின் ஒரு பகுதியைப் படைகளுக்கு அளித்ததாகவும், சில கோயில்களைப் படைகளின் பாதுகாப்பில் விட்டதாகவும், சில சாசனங்கள் கூறுகின்றன. உதாரணமாகச் சில சாசனச்




20