பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


செய்திகளைக் கீழே தருவோம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன் மகாதேவிக் கோவிலில் கல்வெட்டு ஒன்று மூன்று கை மகாசேனையார் பக்தவத்ஸல ஸ்வாமி கோவில் தர்மங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இது முதல் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டு. பிரம்மதேசம் என்று பெயர் வழங்கும் திருவாலீச்வரம் கல்வெட்டு ஒன்று, அவ்வூர்க் கோவிலையும் - ஸ்ரீபண்டாரத்தையும் (பொக்கிஷம்) தேவ கன்மிகளையும், (கோவில் ஊழியர்கள்) மூன்று கை மகாசேனை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இக்கல்வெட்டு முதல் இராஜேந்திரச் சோழனது மகன் பாண்டிய நாட்டில் மண்டலேச்வரனாக ஆண்ட காலத்தில் வெட்டிக் கொடுத்தது. இச்சான்றுகள் லட்சக்கணக்கான போர்வீரர்களது ஊதியம் கோவில் வருமானத்திலிருந்து கொடுக்கப்பட்டது என்பதைக் காட்டுகின்றன.

அப்படியானால், சோழர் காலத்தில் கோயில்களின் வருமானத்தைப் பெருக்க வழிவகைகள் செய்திருக்க வேண்டும். சோழர் காலத்து முன்பு கோவில்கள் மிகச் சிறியவையாயிருந்தன. பல்லவர் காலத்துக் கோயில்கள் மிகச் சிறிய குடைகோயில்களே. அவற்றை மாமல்லபுரத்திலும் திருக்கழுக்குன்றத்திலும் காணலாம். அவற்றிற்கு நிரந்தர வருமானமோ சொத்தோ இருந்ததில்லை. ஆனால் சோழர் காலத்தில் பிரம்மாண்டமான கற்கோயில்கள் எழுப்பப்பட்டன. ராஜராஜன் பிருகதீசுவரர் ஆலயம் கட்டினான். ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் அதே போன்றதொரு கோயில் கட்டினான். ஊருக்கு ஊர் கோவில்கள் தோன்றின. இதனைப் பெரிய புராணத்திலுள்ள வரலாறுகளிலிருந்து அறியலாம். கல்வெட்டுச் சான்றுகளும், ஏராளமாக உள்ளன. இக்கோயில்களைக் கட்ட போரில் சிறைப்பட்ட யுத்தக் கைதிகளையும் போரில்லாத காலத்தில் உள்நாட்டு மகாசேனைகளையும் ஈடுபடுத்தினார்கள் என்று தெரிகிறது. இக்கோயில்களுக்கு ஏராளமான நிலங்களை சர்வ மானியமாக சோழ அரசர்கள் விட்டார்கள். இதற்குச் சில சான்றுகள் கீழே தருவோம்.

‘ராஜராஜன் பெரியகோவில் பணிகள் நடைபெற 35 கிராமங்களை சர்வமானியமாக விட்டதாகக் கல்வெட்டுகள்




21