பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


படையாரிடம் இருந்தன. (3) பிரமதேயம்: இந்நிலங்கள் பிராமணர்களுக்கு உடமையாக இருந்தன. (4) ஜீவிதம்: இந்நிலங்கள், கோயில் பணிசெய்வார்க்கு இனாம் நிலங்களாக ஆயுள் காணியாக இருந்தன.

சோழர் காலத்தில் நிலவுடைமை முறைகளில் செய்த மாறுதல்களின் தன்மையைக் கல்வெட்டுக்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வெள்ளான் வகையில் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமைப் பறித்து கோயில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தங்கள் உரிமைகளை இழந்தார்கள், உழுதுண்போரின் நிலங்களின் பலவற்றைப் பிரமதேயமாக்கினார்கள். ஆகவே நிலவுடைமை கோயிலுக்கோ, கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கங்களுக்கோ மாற்றப்பட்டது. இதனால் உழுதுண்போர் நிலை தாழ்ந்தது. இது மட்டுமல்ல; போர்களுக்கும், கோயில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. இவ்வரிகளை வசூலிக்கும் உரிமை மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட ஊர்ச்சபைகளிடமே விடப்பட்டிருந்தன. அவர்கள் தங்கள் உடைமைகளுக்கும், நலன்களுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் வரியையும், கடமைகளையும் இறைகளையும் வசூலித்தார்கள். வரிகொடுக்க முடியாத ஏழைகளைக் கொடுமைப் படுத்தினார்கள். வரி கோயிலுக்கென வசூலிக்கப்பட்டதால் வரி கொடாதவர்களுக்குச் ‘சிவத் துரோகி’ என்ற பட்டம் சூட்டி நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள். அல்லது நிலத்தில் ஒரு பகுதியை விற்று ‘தண்டம்’ என்ற பெயரால் கோயிலுக்கு அளித்தார்கள். இத்தகைய ஒரு சுரண்டல் முறையைப் படைகளின் பாதுகாப்போடும், மதக் கொள்கைகளின் அனுசரனையோடும் சோழ மன்னர்கள் பாதுகாத்தனர்.

இச்சுரண்டல் முறைகளை மக்கள் எப்பொழுதும் சகித்துக் கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது. வாழ்க்கை துயரங்கள் அவர்களை ஒற்றுமைப்படுத்தின. கொடுமை அளவு மீறும்போது அவர்கள் போராடினர். அப்போராட்டங்களைப் பற்றி நாம் இதுவரை சோழர் வரலாறுகளில் வெளிவந்துள்ள நூல்களில் காண முடியாது. ஏனெனில் அவை மன்னர் வரலாறுகளேயன்றி மக்கள் வரலாறுகளல்ல.
23