பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதன் உதவியோடு உயர்ந்து அதன் ஆதிக்கத்தில் பணிபுரிந்தது. ஆரிய உயர்வு பற்றி தமக்கே உரிய உணர்வு, ஆங்கில ஆசிரியர்களால் போற்றப்பட்டது கண்டு பெருமை கொண்டது. ஆரிய நாகரிகம், வேத நூல்கள், உபநிஷத் தத்துவங்கள், வடமொழி நூல்களில் காணப்படும் அரசியல் கருத்துக்கள் இவற்றை ஆங்கிலேய மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் உணர்ந்து அவற்றைப் பெருமையோடு போற்றினர். ஆங்கில நாகரிகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எவ்வாறு கீழ் நிலையிலுள்ள இந்திய நாகரிகத்தை மாற்றியமைத்ததோ, அதுபோலவே இந்தியாவின் பழங்காலத்திலுள்ள பல்வேறு நாகரிகங்களையும் ஆரிய நாகரிகம், மாற்றியமைத்தது என எண்ணினர். இந்நாகரிகத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாட்டில் ‘பிராமணர்’கள் என்று அவர்கள் நினைத்தனர். உதாரணமாக, எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்காரின் சொற்பொழிவுகளுக்கு, அவர் எழுதிய முன்னுரையில் இக்கருத்தை அவரே கூறுகிறார்:

‘தென்னாட்டில் பிராமணருடைய ஸ்தானம் தனித்தன்மை வாய்ந்தது. வெளிநாட்டாருடைய மதிப்பீட்டில், வேதகால முறை, அடிப்படை மாறுதல் எதுவுமின்றி தென்னாட்டில் நிலவி வருகிறது. தென்னாட்டில் பிராமணருடைய ஸ்தானம் பற்றிய விவாதம் தற்பொழுது முன்னணிக்கு வந்துள்ளது. இந்நிலையில் வரலாற்று ரீதியாக இப்பிரச்சினையை ஆராய்வது அவசியம். இந்திய சமூகத்தில் பிராமணருடைய ஸ்தானம் பற்றி ‘ஸ்த பாத பிராமணம்’ கூறுகிறது. தென்னாட்டிலும் அதே ஸ்தானம் அவர்களுக்கு இருந்தது (வட நாட்டிலிருந்து தென்னாட்டிற்குக் குடியேறிய காலத்திலிருந்து சமீப காலம் வரை இந்நிலை மாறவில்லை). அவர்களுக்கு இரண்டு பொறுப்புகள் சமூகத்தில் இருந்தன. ஒன்று சமூக நன்மைக்காக யாகம் முதலிய வழிபாடுகளைச் செய்வது; மற்றொன்று கல்வி கேள்விகளைப் பாதுகாத்து வளர்ப்பது. இவற்றைப் பாதுகாப்பது என்றால் இவற்றைச் சமூகத்தில் பரப்புவதும் அடங்கும்.

கிடைக்கும் ஆதாரங்களினின்றும், பிராமணர் தங்களது கடமையைத் திறமையாகச் செய்து, தங்கள் நடைமுறையினின்றும் பிற


35