உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீவிரமடையத் தொடங்கி விட்டன. உணவுக்குத் திண்டாடிய நாட்டில் தேவைக்கு மிஞ்சும் உற்பத்தி தோன்றிவிட்டது. அதன் காரணமாக உள்நாட்டு வாணிபமும் தலைதூக்கத் தொடங்கிற்று. முதலில் நிலக்கிழாரில் ஒரு பகுதியினரே வாணிபத் துறையில் இறங்கியிருக்க வேண்டும். ஏனெனில் அவர்களிடம் தானே தேவைக்குப் போக எஞ்சிய தானியம் இருக்கும்? விவசாய உற்பத்தி அதிகமாக வாணிபமும் செழித்தது. பல புதிய பொருள்களுக்குத் தேவை பிறந்தது. இத்தேவை வணிக வர்க்கத்தை வளர்த்தது. முதலில் நிலக்கிழார் வர்க்கத்திலிருந்து தோன்றிய வணிக வர்க்கம் நிலக்கிழார்களின் நிலப்பிடிப்பை எதிர்த்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுதான் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் 8ம் நூற்றாண்டுவரை நிலவிய வர்க்க முரண்பாட்டின் சித்திரம். [1]

இந்நிலையில் பெளத்தம் தமிழ் நாட்டில் பரவியது. பிராமி சாசனங்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பது உண்மையானால் அது அக்காலத்தில் பரவத் தொடங்கியது என்று கொள்ளலாம். ஆனால் செல்வாக்கு பெறவில்லை. அது தமிழ் நாட்டிற்கு வந்த காலத்தில் கி.மு.6ம் நூற்றாண்டில் தோன்றிய ‘தர்ம பாதையாக’ வரவில்லை, 6-ம் நூற்றாண்டில் சமூக மாறுதல்கள், பெளத்த தத்துவங்களையும் மாற்றியிருந்தது. இங்கு வந்த தத்துவம் ‘ஹினாயன’ தத்துவம். இதில் விக்ரக வணக்கம் உண்டு. சக்ரவர்த்திகளும் போதி சத்துவர்களும் சமமாகக் கருதப்படுகிறார்கள், சக்கரவர்த்திகள் பல பிறப்புகளில் செய்த புண்ணியம் காரணமாக அப்பதவியடைகிறார்கள் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆணைச் சக்கரமும், தர்ம சக்கரமும் இணைக்கப்படுகின்றன. நிலப்பிரபுத்துவம் வடநாட்டில் பரவி பேரரசு தோன்றிய காலத்தில் அதற்காதரவாகத் தோன்றிய தத்துவம் இது. இதுதான் தமிழ் நாட்டில் நிலப்பிரபுத்துவம் வளருவதற்கும் அவசியமான தத்துவமாக இருந்தது. இக்காலத்தில் போர் அவசியமில்லை. ஆகவே அஹிம்சையை ஒரு தத்துவமாகக் கொண்ட


42

  1. சிலப்பதிகாரத்தில் வர்க்கப் போராட்டம், - நா.வா. ஜனசக்தி மே.மலர் 1957