பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 
பண்டைத் தமிழர்
வரலாறு தேவை

உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இன்று இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது. இந்திய வரலாற்றுப் பாடப் புத்தகங்களை நீங்கள் படித்துப் பார்த்தால் பண்டைத் தமிழ் நாட்டின் வரலாற்றுக்கென, பத்துப் பதினைந்து பக்கங்கள் ஒதுக்கப்படிருக்கும். அப்பக்கங்களை வரிவிடாமல் வாசித்தால் கீழ்க்கண்ட செய்திகள் காணப்படும்.

‘தமிழ்நாடு இந்திய நாட்டின் தென் பகுதியில் உள்ளதோர் பிரிவு. பழமையான நாகரிகம் படைத்த நாடு. சங்க காலம் எனப்படும் பழமையான காலத்தில் பல நூல்கள் தோன்றின. அவற்றுள் திருக்குறளை இயற்றியவர் வள்ளுவர் என்பார். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் முடியுடை வேந்தர் மூவர் ஆண்டனர். சோழருள் கரிகாலனும் ராஜராஜனும், ராஜேந்திரனும் புகழ் பெற்றவர்கள். சேரருள் செங்குட்டுவன் சிறந்தவன். பாண்டியருள் குறிப்பிடத்தக்கவர் யாருமில்லை. சோழர் பெருவாழ்வு வாழ்ந்த காலத்தில் கம்பன் தோன்றினான். சமணத்தை முறியடித்து சைவ வைணவ மதங்கள். தோன்றின. தமிழ் நாட்டின் வடபிரிவில் பல நூற்றாண்டுகளாக பல்லவர் செங்கோல் செலுத்தினர்.’

இதற்குமேல் தமிழ் நாட்டின் பழம் பெரும் பண்பாட்டைப் பற்றியோ, இலக்கிய வளத்தைப் பற்றியோ, இவ்விரண்டையும் உருவாக்கிய தமிழினத்தவரைப் பற்றியோ, அவர்களது சமூக வாழ்க்கையில் நூற்றாண்டு, நூற்றாண்டுகளாக ஏற்பட்டு வந்த மாறுதல்களைப் பற்றியோ, அம்மாறுதல்களுக்குரிய காரணங்கள் எவை என்பன பற்றியோ, இந்நூல்கள் எதுவும் கூறுவதில்லை.

தமிழர் வரலாறு இவ்வளவுதானா; சிற்சில அரசர்கள், கவிஞர்கள், போர்வீரர்கள், அமைச்சர்கள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள்தான் தமிழ்நாட்டின் முழுமையான சரித்திரமா? தமிழ்நாட்டின்


1