பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதன் பொருள். அதே பொருளில் அவள் ‘பழையோள்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளாள். இவள் யாரால் வணங்கப்பட்டாள்? அதற்கு அவளுடைய மற்றொரு பெயர் பதிலளிக்கிறது. பரிபாடல் பதிகத்தில் அவள் ‘காடுகள்’ என்று அழைக்கப்படுகிறாள். ‘காடு கிழாள்’ என்ற மறு பெயரும் அவளுக்கு உண்டு. குறிஞ்சி நில மக்கள், வேட்டைத் தொழிலிலிருந்து புராதனப் பயிர்த் தொழிலுக்குத் திரும்பிய காலத்தில் புன்புலப்பயிர் செய்யத் தொடங்கினார்கள். அக்காலத்தில் பெண்கள் ஆதிக்கம் பெறத் தொடங்கினார்கள். ஆகவே காட்டில் பெண்கள் பயிர் செய்யத் தொடங்கிய காலத்தில் காடு கிழாளும் தோன்றினாள்.

அதற்கு முன்பே. சேயோன் (வேலன்) கடவுளாகி விட்டானல்லவா? அவனுடையச் சிறப்பு ஆண் ஆதிக்கத்தையல்லவா குறிக்கிறது? பெண் ஆதிக்கச் சமுதாயம் அவனுக்கும் ஓர் இடம் கொடுக்க வேண்டும். ஆகவே அவனைக் காடு கிழாளின் மகனாக ஏற்றுக் கொண்டது. அவன் வீரன் ஆகவே அவளையும் வீரமங்கையாக்கியது. வீரத் தொழிலில் வெற்றி பெறுவோருக்கு அவள் கொற்றவை ஆனாள். அவனும் கொற்றவைச் சிறுவன் ஆனான். பிற்காலத்தில் வேட்டைத் தொழிலை விட்டு, ஆண்கள் ஏர் உழவின் மூலம், பயிர்த் தொழிலில் முக்கிய பங்கு பெறத் தொடங்கியபின், மறுபடியும் வேலன் தாய்க் கடவுட் சேய் ஆகிவிட்டான். பெண்ணாதிக்கச் சமுதாயத்தில் தாய்வழி உறவு பெருமையாகச் சொல்லப்படுகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தில், தந்தை வழி உறவு பெருமையாகச் சொல்லப்படுகிறது.

சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாட்டு முறை சொல்லப்படுகிறது. கொற்றவை கோயில் ஐயைக் கோட்டம் என அழைக்கப்படுகிறது. ஐயைக்கு விழாச் செய்ய வேண்டுமென நாள் குறித்துச் சொல்லுபவள். அவள் தெய்வவெறி கொண்டு ஆடுபவள். ‘பழங் கடனுற்ற முழங்குவாய்ச் சாலினி’ என்று அவள் வருணிக்கப்படுகிறாள். ஐயைக்குப் படிவமில்லை. ஒரு குமரிப் பெண்ணைக் கோலம் புனைந்து ஐயை என்று பெயரிட்டுக் கலைமான் மீது ஏற்றி வணங்குகிறார்கள்.

73