பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வழக்கங்களும் இப்பூசனைகளில் இடம்பெறுகின்றன. அம்மனுக்கு முன் முக்கோணம் அல்லது தாமரை வடிவத்தில் யந்திரங்கள் கோலமாகப் போடப்படுகின்றன. இவை எதனைக் குறிக்கின்றன என்று முன்னரே கண்டோம். அவற்றின்மீது பூரண கும்பம் வைத்து, நெல் நிரப்பி, மஞ்சளும், தேங்காயும் வைக்கிறார்கள். அல்குல் இனவிருத்திக்கு அடையாளம். அதனோடு தொடர்பு கொள்ளும், நெல்லும் மஞ்சளும், தென்னையும் பல பயிர்வகைகளுக்கு அடையாளங்கள். பயிர்களெல்லாம் ஒன்று நூறாகப் பெருக வேண்டும் என்பது இச்செய்கையில் மறைந்திருக்கும் பொருள். அம்மனுக்குக் குங்குமம் அர்ச்சனை செய்கிறார்கள். தந்திர நூல்களில் குங்குமம் மாதவிடாய் இரத்தத்தைக் குறிக்கும்.

முதன் முதலில் பூப்பெய்தியதிலிருந்து, மாதவிடாய் நிற்கும் காலம் வரை, பெண் செழிப்பின் சின்னம். அதற்கு முன்னும் பின்னும் அவள் கருவுயிர்த்து, இனச்செழிப்புக்குக் காரணமாவதில்லை. ஆகவே மாதவிடாய் உதிரம் மாயசக்தி உடையது. செழிப்புக்கு அறிகுறி என்ற கருத்துப் புராதன மக்களுக்கு ஏற்பட்டது. இன்னும் நாகரிகமடையாத தொல்குடி மக்களுக்கு இந்த நம்பிக்கை உள்ளது. மாதவிடாய் பருவத்திலுள்ள பெண்களை விதை முளைக்கும் வயலைச் சுற்றி வரச் செய்தால் விதை வளர்ந்து நல்ல பயன்தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதற்கு அடிப்படையான காரணம் மனிதனது பிறப்புக்கு ஆண் பெண் உறவு காரணமாவதுபோல உலகில் எல்லாம் தோன்றுவதற்கு உடலின் நிகழ்ச்சிகள் போன்ற வேறு பிரகிருதி நிகழ்ச்சிகள் காரணம் என்ற நம்பிக்கையும், பிரகிருதியின் செழிப்பை, பெண்ணின் செழிப்புச் சக்தி வளர்க்கும் என்ற நம்பிக்கையுமே. எல்லா அம்மன்களுக்கும் சிவன் கணவன் என்ற கதை இன்று வழங்கி வருகிறது. முத்தாரம்மன் கதை, குமரியம்மன் கதை போன்ற கதைகளில் இவ்வம்மன்மார் சிவனது மனைவிமாராக பேசப்படவில்லை. சிவனை எதிர்த்துப் போராடிய அசுரர்களுக்கு உதவியாகவும் கதை சொல்லுகிறது. இக்கதைகளைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி தாய் வழிச் சமுதாயம் பற்றிய புதிய கருத்துகளைக் கொடுக்கும்.

77