பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிள்ளை அவர்களது கருத்தை எடுத்துக் கொள்வோம். அவர்கள் சொல்வது போல பாரத ராமாயணத் தலைவர்களுக்குச் சமமாகப் பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து கூறுவது தமிழ்ப் புலவர்களது மரபுதான். ஆனால் மோரியர்களைப் பற்றி வரும் குறிப்புக்களில் அவர்கள் பழங்காலத்து மன்னர்கள் என்ற கருத்து காணப்படவில்லை. புறநானூற்றுப் பாடலில் ஆதனுங்கனது அறத்துறை மோரியர் ஆட்சி நிலைபெற்று விளங்குகின்ற இடங்களில் நிலைபெற்ற அறத்துறை போன்றது என்று சொல்லப்படுகிறது. ஆதனுங்கன் காலமும், மோரியர் காலமும், நிகழ் காலத்தில் பேசப்படுகின்றன. எனவே இது மோரியர் காலத்தையே குறிக்கிறதென்பது வெளிப்படை. இதே செய்யுள் தேர்ப்படை மிகுதியுடைய மோரியரது வெற்றிச் சிறப்பைக் கூறுகிறது. எக்காலத்திலோ நடைபெற்ற போர்களில் கிடைத்த வெற்றிகளைப் பெறுமையாகச் சொல்லிக் கொள்ள வேண்டுவது இல்லை. இவ்வெற்றிகளெல்லாம் சமீப காலத்தில் கிடைத்த வெற்றிகளையே குறிக்கின்றன. மேலும் மோரியர் பரம்பரை அழிந்த பிற்பாடு கலிங்கத்தில் காரவேலர் போன்ற பேரரசர்களும் வட இந்தியாவில் கங்கர் பரம்பரையும் தோன்றிவிட்டன. பிள்ளை அவர்கள் கூறுவதுபோல கி.பி. முதல் நூற்றாண்டில் இப்பாடல்கள் எழுதப்பட்டிருந்தால் அக்காலத்தில் மெளரிய சாம்ராஜ்யம் மறைந்து இந்தியாவின் வடமேற்குப் பகுதி கிரேக்கர்களின் ஆட்சியிலும் வடகீழ்ப்பகுதி இரண்டு, மூன்று சக்கரவர்த்திகளின் கீழும் சென்று விட்டன.

ஆகவே முன்னூறு வருஷங்களுக்கு முன் அழிந்து விட்ட பரம்பரையைக் குறித்து புலவர் நிகழ் காலத்தில் கூறியிருக்க மாட்டார். தவிரவும், வம்பமோரியர் என்ற சொற்றொடர் புதியவர்களான மோரியர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வம்ப மாகள், வம்பலர், என்ற சொற்கள் ஊருக்கோ நாட்டுக்கோ புதியவர்கள் என்ற பொருளில் பண்டைப் புலவர்களால் கையாளப்பட்டது. வம்பன் என்பதற்குத் தற்காலத்தில் இருக்கும் பொருளை அகநானூறு, புறநானூற்றில் வரும் இடங்களில் கொள்ளக் கூடாது. வம்பர் என்பது தற்காலத்திலுள்ள பொருளைத்தான் ‘இந்தியாவில் புராதன சரித்திரம்’ என்ற நூலில் ஆசிரியர் upstarts என்று விளக்கம் கொடுத்தார். புதியவர் என்றால் செய்யுள் எழுதப்பட்ட காலத்தில் அல்லது அதற்குச் சற்று முன்பாவது

84