பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வசதிகளை வெவ்வேறு வழிகளில் தங்கள் தொழில்கள் மூலம் பெற்றார்கள். குறிஞ்சி நில மக்கள் நாகரிகத்தின் தொடக்க காலக் கட்டத்தில் இருந்தார்கள் ஆண்கள் வேட்டையாடினார்கள். பெண்கள் அவரை, சாமை, தினை முதலியன பயிர் செய்தார்கள். வேட்டையாடும் தொழிலால் நாடோடியாகத் திரிந்த மக்களினம் நிலை கொள்ளப் பெண்கள் உழைப்பு காரணமாயிற்று. ஆரம்ப நாகரிகம் பெண்கள் வளர்த்த நாகரிகமே. அதையடுத்த நிலங்களில் அதற்கடுத்தக் கட்டத்திலுள்ள முல்லை நாகரிகம் தோன்றி நிலை கொண்டிருந்தது. ஆடுமாடுகளைப் பழக்கி 'ஆப்பயன் மூலம் வாழ்க்கை நடத்திய ஆயர் அங்கு வாழ்ந்து ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கினார்கள். ஆற்றோரங்களில் உழவுப் பயன் மூலம் தலைச்சிறந்த நாகரிகம் தலையெடுத்தது. அது வளர்ச்சியுறவே தேவைக்கு எஞ்சிய தானியங்கள் கிடைத்தன. நிலவுடமைச் சமுதாயம் தோன்றிற்று. அதனோடு வர்க்கப் பிரிவினையும் தோன்றி நில உடைமையாளர் அரசியல் ஆதிக்கம் பெற்றனர். குறிஞ்சி நிலத்தாரையும், முல்லை நிலத்தாரையும், போராலும், உறவு முறையாலும் தங்கள் வசப்படுத்தினார்கள். மூவேந்தர் முடியரசுகள் நிலைப் பெற்றன. அரசு நிலைப்பெற்ற பின்னர் வாணிபம் தலை தூக்கியது. கடல் வழியாக வேற்று நாடுகளோடு வாணிபத் தொடர்பு பெருகிற்று. பல்வேறு தொழில் செய்தவர்களிடையே இருந்த முக்கியமாகக் கடற்கரையில் வாழ்ந்த பரதவர், உமணர் போன்ற சாதியினரிடமிருந்து வணிகர் வர்க்கம் தோன்றிற்று. வணிகர் பெரும் பொருளீட்டினர். அரசர்குடிக்குச் சமமான செல்வாக்குப் பெற்றது. சிலப்பதிகாரக் காலத்தில் அரசர் ஆதிக்கம் ஓங்கி நின்றது. மூன்று மண்டலங்கள் தனித்து அரசியல் பகுதிகளாகப் பிரிந்தன. குறிஞ்சி நில மக்களும், முல்லை நில மக்களும், பாலை நில மக்களும், நெய்தல் நில மக்களும் தனித்தனியான பண்பாடுகளை பின்பற்றி வந்தனர். நிலவுடைமையாளர் ஆதிக்கத்திலிருந்தனர். நிலவுடைமைச் சமுதாயத்தின் பண்பாடு மற்றைப் பண்பாடுகளைக் இணைக்க முயன்றது. கலையிலும், இலக்கியத்திலும் நிலவுடைமையாளர்களது செல்வாக்கு ஓங்கியிருந்தது. - -

9]

91