பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 தமிழர் வரலாறு வடிவமாம் எனல் எங்ங்ணம் பொருந்தும். காஞ்சி என்பதே பழந்தமிழ்ப் பெயர்; தங்கள் ஊர்ப் பெயர்களோடு "புரம்" என்பதை இணைக்கும் வழக்கத்தை ஒட்டி, காஞ்சி வந்த ஆரியர்கள், அக்காஞ்சி என்பதன் பின்னர்ப் புரம் என்பதை இணைத்துக் காஞ்சீபுரம் என ஆக்கிவிட்டனர் என்பதே மொழி வளர்ச்சியின் இயல்பு நெறியாகும். ஆக இதுகாறும் எடுத்து வைத்த விரிவான, விளக்கச் சான்றுகளால், "பழந்தமிழ்ப் பாக்களில், காஞ்சி நாடாண்ட பழந்தமிழரசர் பெயர் குறிப்பிடப்படவில்லை; அந்நாட்டுக் காஞ்சி, கச்சி என்ற பெயர்கள் தாமும் தமிழ்ச் சொற்கள் ஆகா: வடக்கிலிருந்து வந்து அங்கு வாழத் தொடங்கிய சமஸ்கிருத மொழியாளர்கள், அந்நகருக்கு இட்டு வழங்கிய சமஸ்கிருதப் பெயராக, "காஞ்சீபுர" என்பதன் சுருங்கிய வடிவமும், அதன் தமிழாக்க வடிவமுமே ஆம் என்ற, திருவாளர் அய்யங்கார் அவர்களின் கூற்றிற்கான அகச்சான்று எதுவும் இல்லை ; அது வெறும் கற்பனையே, என்பதும், மாறாக அந்நாடாண்ட பழந்தமிழ் அரசர் பெயர் குறிப்பிடப்பட்டுளது : காஞ்சி என்பது, பழந்தமிழர் அறிந்த தனித்தமிழ்ப் பெயரே கச்சி, அதன் தமிழாக்கம் அன்று, மாறாகக் காஞ்சியின் மற்றொரு பெயர் என்பதற்கான அகச்சான்றுகளே நிறைந்துள்ளன என்பதும் தெளிவாக் கப்படவே, "காஞ்சி மாநகர், தமிழ்நாட்டின் எல்லைக்குள் இடம் பெற்றிருந்தாலும், பண்டைக்காலத்தில், அது தமிழர் நாகரிகத்தைக் கொண்டிருக்கவில்லை; மாறாகச் சமஸ்கிருத நாகரிகத்தின் ஒரு நாயகமாகவே இருந்தது; அது, தமிழ் அரசர்களாலும் ஆளப்படவில்லை, மாறாக, ஆரிய ராஜாக்களால் ஆளப்பட்டது" என்ற அய்யங்கார் கூற்று, உண்மைக்கு அப்பாற்பட்டது என்பது உறுதிபடத் தெளிவாக்கப்பட்டது. - - தொண்டை மண்டலத்துத் தலைசிறந்த நகரின் பெயர். கி.மு. இரண்டாவது நூற்றாண்டு தொட்டே, "காஞ்சி" என்ற தனித் தமிழ்ச் சொல்லினாலேயே பெயர் பெற்றிருந்தது என்பதை உறுதி செய்யும் வலுவான வரலாற்றுச் சான்று ஒன்றும் உளது.